ETV Bharat / state

பனையூர் அலுவலகத்திற்கு தவெக எம்.எல்.ஏக்கள் வருகை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இரண்டாவது முறையாக இன்று ஆளுநரை சந்தித்துப் பேசினார்.

பனையூர் தவெக அலுவலகம்
பனையூர் தவெக அலுவலகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2026 at 1:07 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள், பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காத நிலையில் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆதரவுக் கோரி தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் விசிக, இடதுசாரிகள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்த சூழலில், இரண்டாவது முறையாக இன்று (மே 07) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறும், சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று ஆளுநரிடம் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக, மாமல்லபுரம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள தவெக எம்எல்ஏக்கள், கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அதேபோல், ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். மற்றொருபுறம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்புக் கொள்ளக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே சரியான தீர்வு: ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்

இதனிடையே, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு அளிக்கப்பட்டிருந்த முதலமைச்சருக்கான உயர்மட்ட பாதுகாப்புத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்துடன், கான்வாய் வாகனங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. எனினும் பனையூர் அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணிக்கையில் தனிப் பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், திரைப்பிரபலங்களும் ஆளுநரை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.