ETV Bharat / state

'தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்' தலைமைத் தேர்தல் ஆணையருடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் நிறைய தகுதியான வாக்காளர்கள் இணைக்கப்படவில்லை என்று அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் (கோப்புப்படம்)
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் (கோப்புப்படம்) (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 4:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் ஆகிய மாநில கட்சிகளும், இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய தேசிய கட்சிகளும் பங்கேற்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் முன்வைத்தனர்.

சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம்
சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் (ETV Bharat Tamil Nadu)

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ''ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். திருவிழாக்கள் போன்ற நேரங்களில் தேர்தலை நடத்தக்கூடாது. கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி இல்லை என்பது எல்லாம் கிடையாது; நேர்மையான முறையில் தேர்தல் நடைப்பெற வேண்டும். திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை தருகின்றனர், அதனை தடுக்க வேண்டும்.'' என்றார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு (ETV Bharat Tamil Nadu)

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, ''தேர்தல் நடைமுறைகள் நியாயமாக நடைப்பெற வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் நிறைய தகுதியான வாக்காளர்கள் இணைக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகளிடம் உள்ள வாக்காளர்கள் பட்டியல் அங்கீகரிப்பட்ட கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். வாக்கு சதவிகிதத்தில் மாறுபாடுகள் வருகின்றன. அதுபோல வரக்கூடாது என எடுத்துரைத்தோம். 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை போட்டுள்ளோம். அவர்களை பதிவு செய்ய வேண்டும். ஒரே நேரத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்'' என்றார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (ETV Bharat Tamil Nadu)

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எங்கள் கருத்துகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கூறினோம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி பொறுத்த வேண்டும் என கேட்டுள்ளோம். வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டர் வரை யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது.

ஆளும் கட்சி சார்ந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க முடியாத சூழலில் பறக்கும்படையில் மத்திய அரசு ஊழியர்களை சேர்க்க வேண்டும். தேர்தல் நிறைவடைந்த பிறகு வாக்குச்சாவடி அளவில் வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் இறுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை வரும்போது ஒப்பிட்டு பார்க்க முடியும் என கூறினோம்.

வாக்குச்சாவடியை அபகரித்து ரவுடிகள் மூலம் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது என்பதால், அதை தடுக்கும் வகையில் ரவுடிகளை முன்கூட்டியே கைது செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திமுகவிற்கு விசுவசமாக இருப்பார்கள். அதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஒரே கட்டமாக, ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: அண்ணா, காமராஜராக நல்லகண்ணுவை பார்க்கிறேன் - ரஜினிகாந்த் புகழஞ்சலி