புதிதாக பொறுப்பேற்ற 5 மாவட்ட ஆட்சியர்கள்: கொடுத்த அதிரடி வாக்குறுதிகள்
தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாப்பது முக்கிய கடமையாகும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.


Published : June 1, 2026 at 3:24 PM IST
சென்னை: திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தஞ்சாவூர், தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்கள் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
திருநெல்வேலி ஆட்சியர் பொறுப்பேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தின் 225- வது ஆட்சியராக ஆனந்த் மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ஆனந்த் மோகன், "வரும் ஜூன் 04- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, இன்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அனைத்துப் பள்ளிகளும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி இடைநிற்றலைக் குறைக்க ஏற்கனவே உள்ள கண்காணிப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். திருநெல்வேலி மாவட்டம், அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட மாவட்டம். இளைஞர்களின் கனவுகளை நனவாக்க மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும். இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சி வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இடையிலான பிணைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய வற்றாத நதிகளில் ஒன்றான தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாப்பது முக்கிய கடைமையாகும்.
பாதாள சாக்கடை திட்டங்களை சீரமைப்பதன் மூலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து தாமிரபரணியைச் சுத்தமாக வைத்திருக்க 100% முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தின் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கக் காவல்துறையுடன் இணைந்து செயல்பட உள்ளோம். குறிப்பாக, பதற்றமான கிராமங்களுக்கு முதல் மாதத்திலேயே நேரில் சென்று மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்காக திறந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக பத்மஜா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் பத்மஜா, "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. மக்களின் குறைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வுக் காணப்படும். மக்களுடைய குறைகள் ஏதேனும் இருந்தால் ஆய்வின்போது எனது பார்வைக்கு கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரப்படும்!#ariyalur | #districtcollector | #NMirunaliniIAS | #womensafety | #EtvBharatTamilNadu pic.twitter.com/cGGwEiXd1O
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) June 1, 2026
பெண் குழந்தைகளின் முன்னேற்றம்: அரியலூர் ஆட்சியர்
அரியலூர் மாவட்டத்தின் 21- வது ஆட்சியராக மிருளாணி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியருக்கு பூங்கொத்துக் கொடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் மிருளாணி, "பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்ததினால் அரியலூர் மாவட்டத்தைப் பற்றி ஓரளவு தெரியும். அரியலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. அரியலூர் மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும். அதேபோல், பெண் குழந்தைகளின் முன்னேற்றம், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கிடைத்துள்ள அரிய கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் மற்றும் அதன் எச்சங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றை கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
திருப்பத்தூர் ஆட்சியர் பொறுப்பேற்பு
திருப்பத்தூர் மாவட்டத்தின் 6-வது ஆட்சியராக ரவிக்குமார் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
| இதையும் படிங்க: தொடர் மழை எதிரொலி: தென்பெண்ணை ஆற்று நீர் துர்நாற்றத்துடன் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை |
அரசு அலுவலர்களை அறிவுறுத்திய ஆட்சியர்
தருமபுரி மாவட்டத்தின் 52- வது ஆட்சியராக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே முதன்மை நோக்கம் - ஆட்சியர் பேட்டி#dharmapuri | #DistrictCollector | #vsaravananIAS | #infrastructurefacilities | #EtvBharatTamilNadu pic.twitter.com/V4MBo2djWW
— ETV Bharat Tamil Nadu (@ETVBharatTN) June 1, 2026
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் சரவணன், "இனி வரும் காலங்களில் தர்மபுரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உரிய கவனம் செலுத்துவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நகர சாலைகள், கிராம சாலைகள், குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசின் திட்டங்களுக்கு ஏற்ப தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவதற்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்வு காண வேண்டும் என்று அரசு அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன்" என்றார்.
மாவட்டத்தின் உயர்வுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ரேவதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் ரேவதி, "இந்த மாவட்டத்தில் இதற்கு முன்பு இருந்த பல மாவட்ட ஆட்சியர்கள் நல்ல விஷயங்களைச் செய்துள்ளனர். அவற்றை தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்வேன். மாவட்டத்தின் உயர்வுக்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுங்கள். அரசின் நலத்திட்டங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க முயற்சிப்பேன்" என்றார்.

