ETV Bharat / state

வேகமெடுக்கும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்! தேர்தலுக்கு முன் தீர்ப்பு?

தமிழகத்தில் முன்னாள், இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 193 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 14, 2025 at 6:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

- By க.சசிக்குமார்

சென்னை: திமுக அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகளில் தேர்தலுக்கு முன் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆட்சிகள் மாறும்போது காட்சிகளும் மாறும்' இன்றைய ஆளும் கட்சி நாளை எதிர்க்கட்சியாகும்போது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வது வழக்கமாகிவிட்டது. டெண்டர்கள் ஒதுக்குவது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்ப்பது, சட்டவிரோத பணபரிமாற்றம் என பல்வேறு வழக்குகளில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் சிக்குகின்றனர். இரட்டை குழல் துப்பாக்கி போல அமலாக்கத் துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றன.

அந்த வகையில் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட திமுக அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

  • அமைச்சர் துரைமுருகன்

கடந்த 1996 - 2001 ஆம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. ஆட்சி மாற்றத்துக்கு பின் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் ஆகியோரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007இல் உத்தரவிட்டது.

அமைச்சர் துரைமுருகன் விடுவக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் 2013இல் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினர் மீதான வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி (ETV Bharat Tamil Nadu)
  • அமைச்சர் ஐ.பெரியசாமி

கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான மனைகளை மறைந்த முன்னாள் முதலமைச்சரின் பாதுகாவலர் கணேசனுக்கு ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஐ.பெரியசாமி மீது 2012ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி. எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், அரசிடம் முறையான அனுமதி பெறாமல் தொடரப்பட்ட வழக்கு என்பதால், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் 2023 ஆம் ஆண்டு விடுவித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ. பெரியசாமி மீதான வழக்கை தினமும் விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

முன்னதாக, கடந்த 2006 முதல் 2010ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் பெரியசாமி, அவரின் மனைவி பி.சுசீலா உள்ளிட்டோருக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. நிலுவையில் இருந்த இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018 ஆம் ஆண்டு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோரை விடுவித்ததை ரத்து செய்ததுடன், தினந்தோறும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் (ETV Bharat Tamil Nadu)
  • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

கடந்த திமுக ஆட்சியான 2006 - 2010 காலங்களில் 44,05,967 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி மீது விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் அமர்வு நீதிமன்றம், அமைச்சர் உள்பட அனைவரையும் விடுவித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், வழக்கை தினமும் விசாரித்து 6 மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் (ETV Bharat Tamil Nadu)
  • அமைச்சர் தங்கம் தென்னரசு

2006 - 2010 திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ரூ.76, 40,000 சொத்து சேர்த்ததாக தற்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்தது. இந்த வழக்கையும் தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், தினமும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் வழக்கை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவுகளால் இவ்வழக்குகளில் தினமும் விசாரணை நடத்தப்பட்டு அனைத்து வழக்குகளிலும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். திமுகவின் முக்கியப் புள்ளிகளான அமைச்சர்கள் மீதான அனைத்து வழக்குகளிலும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அமைச்சர்களுக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின்படியான அறிக்கை
நீதிமன்ற உத்தரவின்படியான அறிக்கை (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: எம்.எல்.ஏ அருள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்: பாமக வழகறிஞர் பாலு புகார்!

தமிழகத்தில் முன்னாள், இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 193 வழக்குகளும், புதுச்சேரியில் 23 வழக்குகளும் என மொத்தம் 216 வழக்குகள் தற்போது வரை சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழக்குகளை தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.