தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்ட பலன்கள் என்னென்ன? - அரசு ஊழியர் சங்கம் விளக்கம்
தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் கேட்காமலே நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published : January 3, 2026 at 10:51 PM IST
- By ச.உசேன்
சென்னை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்ட பலன்கள் என்னென்ன? என்பது குறித்து அரசு ஊழியர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று திமுக அறிவித்து இருந்தது. ஆனால் நான்கரை ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவை பற்றி ஆய்வு செய்ய ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தன்னுடைய முழு அறிக்கையை தமிழக அரசுக்கு கடந்த வாரம் வழங்கியது.
இச்சூழலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசை கண்டித்து ஜனவரி 6ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதில், ''பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பு ஊதியம், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி இருந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு தலைமையில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஓய்வூதிய அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் நிதிச் சூழலில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதியமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களிடம் முதலமைச்சரும் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து இன்று தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) முக்கிய அம்சங்கள்:
1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
2. ஐம்பது சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
3.ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
5.புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேற்கூறிய இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால் ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்த பங்களிப்பு தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் முதல்வர் அறிவித்தது எங்களின் 20 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீத ஓய்வூதியம் வழங்கப்படும். பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். அகவிலைப்படி உடன் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவிப்பு இந்த நிதியாண்டிலயே செயல்பாட்டுக்கு வரும். மற்ற கோரிக்கைகளையும் ஜனவரி மாதத்திற்கு உள்ளாக நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளதால் வருகிற 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது'' என்று கூறினார்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், ''எங்களின் பல ஆண்டு கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. சம்பளம் பிடித்தம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருக்காது. ஆனால் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் 10% சம்பளம் பிடித்தம் உள்ளது.
இவை பிடிக்க கூடாது தான். இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் இவை கூட இல்லாமல் இருந்ததை நினைத்தால் இந்த ஓய்வூதிய திட்டம் மகிழ்ச்சி தான். மற்றபடி பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஓய்வூதிய உத்தரவாதம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், அனைத்தும் புதிய திட்டத்திலும் உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் நிதி சுமை அரசின் மீது முழுமையாக இருக்கும். புதிய திட்டத்தில் 10% பங்களிப்பு ஊழியரும் பங்குகொள்வதால் அரசுக்கு நிதிச் சுமை குறையும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழுமையாக என்ன இருக்கிறது? என்பது அரசாணை வந்த பிறகு தான் தான் தெரியும்'' என்றார்.
'அடிவயிற்றில் பால் வார்த்த முதலமைச்சர்' - திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ''அரசு ஊழியர்களின் அடிவயிற்றில் பால் வார்த்துள்ளார் நமது முதலமைச்சர். அரசு ஊழியர்களின் நெடுங்கால கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ள முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
'நாட்டுக்கு முன்னுதாரணமாக அமையும்'- மு.வீரபாண்டியன்
சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், ''நீண்ட காலம் காத்திருந்ந ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் இந்த ஓய்வூதிய திட்டம் தரும். நாட்டுக்கு முன்னுதாரணமாக அமையும். சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.
''முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டு'' - சிபிஎம் சண்முகம்
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ''தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய பென்ஷன் திட்டத்தின் பெரும்பகுதி அம்சங்களை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
'கேட்காமலே நிறைவேறும்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ''தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசை நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்.
அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம். திராவிட மாடல் நல்லாட்சி தான் தொடரும். தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

