சென்னை பறக்கும் ரயிலை வாங்க தமிழ்நாடு அரசு திட்டம் - மெட்ரோவுடன் இணைக்க வியூகம்
சென்னை பறக்கும் ரயிலின் 33 சதவீத பங்குகளை, சுமார் ரூ.700 கோடிக்கு தமிழ்நாடு அரசு வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published : December 13, 2025 at 9:58 AM IST
சென்னை: பறக்கும் ரயில் சேவையை முழுவதுமாக தமிழ்நாடு அரசு எடுத்துக் கொண்டு, மெட்ராே ரயில் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்துவதற்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) பரிந்துரை வழங்கியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை 19.34 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் ரயில் ஓடுகிறது. அதனை வேளச்சேரியில் இருந்து புனித தாமஸ் மலை வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில், தினமும் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். கடற்கரை, மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 3 நிலையங்களை மட்டும் 40 விழுக்காடு பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
பறக்கும் ரயில் சேவை
இந்நிலையில், சென்னை பறக்கும் ரயில் சேவையை தமிழ்நாடு அரசு முழுவதுமாக வாங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது ரயில்வே அமைச்சகம், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் 33 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறது. அதனை ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடிக்கு தமிழ்நாடு அரசு வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பறக்கும் ரயில் திட்டத்தின், மீதமுள்ள 67 விழுக்காடு பங்குகளை, தமிழ்நாடு அரசு வைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் இறுதி போடப்படலாம் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை வாங்கியப் பின்னர், அதனை மாற்றம் செய்ய உலக வங்கியிடம் 4,000 கோடி ரூபாய் கடனை தமிழ்நாடு அரசு கோரும் என்று கூறப்படுகிறது. அதில், புதிய பெட்டிகள் வாங்க 1,000 கோடி ரூபாயும், சுமார் 20 ரயில் நிலையங்களை சரி செய்வது, எஸ்கலேட்டர் அமைப்பது, 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசதிகளை உருவாக்குவதற்கு மீதித் தொகையும் செலவாகும் என்று தோராயமான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இந்த பறக்கும் வழித்தடத்தை முழுவதுமாக கையில் எடுத்தவுடன், ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, குளிர்சாதன வசதிகள் அடங்கிய ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகள், சுத்தமான கழிப்பறை, நல்ல வெளிச்சம் என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.
கும்டாவின் திட்டம்
2027 டிசம்பரில் இது மெட்ரோ போல செயல்பட தொடங்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில்வேயில் இருந்து மெட்ரோ தரத்திற்கு மாறும் மாறும் முதல் சேவை இதுவாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையின் பயண நேரத்தை குறைக்க கும்டா, பெரிய திட்டம் போட்டிருக்கிறது. சென்னையில், நெரிசல் மிகுந்த நேரத்தில் பயணிகள் 90 நிமிடம் வரை பயணிக்க வேண்டியிருக்கிறது.
இதை 2048-க்குள் 60 நிமிடமாக குறைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 2.27 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய கும்டா பரிந்துரைத்துள்ளது. இதில், 1.92 லட்சம் கோடி ரூபாய் பொது போக்குவரத்துக்காக செலவிடப்படும் என்றும், இதனால் மொத்தமாக சென்னை போக்குவரத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் கும்டா தெரிவித்துள்ளது.

