11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5.32 லட்சம் மிதிவண்டிகள் - டெண்டர் கோரிய தமிழக அரசு
தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Published : August 28, 2026 at 3:00 PM IST
சென்னை: 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5.32 லட்சம் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்கான தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் 2026–27ஆம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மிதிவண்டி
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள மிதிவண்டிகள் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக இந்தியாவில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து நிர்ணய விலை ஒப்பந்தம் (Fixed Rate Contract) அடிப்படையில் மிதிவண்டிகளை கொள்முதல் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2,37,133 மிதிவண்டிகளும், மாணவியர்களுக்கு 2,95,255 மிதிவண்டிகளும் என மொத்தம் 5,32,388 மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த மிதிவண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் இணைந்து வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150 நாட்கள் அவகாசம்
மேலும், கொள்முதல் ஆணை பெற்ற நாளில் இருந்து 150 நாட்களுக்குள் மிதிவண்டிகளை வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ரூ.70 லட்சம் முன்பிணைப்பு தொகையை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் தொடர்பான பதிவு மற்றும் கூடுதல் விவரங்களை https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். டெண்டர் ஆவணங்களை இணையவழியாக சமர்ப்பிக்க ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 28 மாலை 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர் மற்றும் மாணவியருக்கான தலா ஒரு மாதிரி மிதிவண்டியை சமர்ப்பிக்க வேண்டிய செப்டம்பர் 28 ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8-ஆம் தேதி ஏலக்கூட்டம்
ஏலக்கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி செப்டம்பர் 29 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு இணையவழியாக திறக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மேம்படுத்தப்பட்ட மிதிவண்டிக்கான அறிவிப்பு வெளியான நிலையில், தற்பொது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

