பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும்படி யாரும் கெஞ்சவில்லை - விவசாயிகள் ஆவேசம்
தற்போதைய அறிவிப்பு அனைத்து விவசாயிகளுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளார்.

Published : May 26, 2026 at 3:14 PM IST
சேலம்: "பயிர் கடனை தள்ளுபடி செய்யும்படி விவசாயிகள் யாரும் கெஞ்சவில்லை. முதலமைச்சர் விஜய், தேர்தல் அறிக்கையில் கூறியதன் அடிப்படையில் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு விஜய் தலைமையிலான தவெக அறிவித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி இருந்தது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்று 2 வாரங்கள் ஆன நிலையில், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி பற்றிய எந்தவொரு அறிவிப்பும் வராமல் இருந்தது. ஆகையால், மாநிலம் முழுவதும் விவசாய சங்கங்கள், ஊடகங்கள் வாயிலாக பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கை முன் வைத்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று (மே 25) தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், விவசாயிகள் பெற்ற ரூ. 50 ஆயிரம் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த மே 1, 2025 முதல் பிப்ரவரி 28, 2025 வரை, விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
விஜய் அரசின் ‘பயிர் கடன் தள்ளுபடி’ பெருத்த ஏமாற்றம் விவசாயிகள் வேதனை#CropLoanWaiver | #cmvijay | #TVKGovernment | #farmersdisstress | #EtvBharatTamilNadu pic.twitter.com/3i4SBdscHS
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) May 26, 2026
கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ரூ. 50 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு ரூபாய் 40,000 தள்ளுபடியும், ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடியும், ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடியும், ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 90 ஆயிரம் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியும், ஒரு லட்ச ரூபாக்கும் அதிகமாக கடன் பெற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடியும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
| இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது; சபாநாயகரிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு |
இந்த தள்ளுபடி தங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அனைத்தும் வேதனை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் படி விவசாயிகள் யாரும் கெஞ்சவில்லை. முதலமைச்சர் விஜய், தேர்தல் அறிக்கையில் என்ன குறிப்பிட்டார் என்பதை நினைவு கூர்ந்து, பயிர்க் கடன் தள்ளுபடியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியான பிறகு விவசாயிகள் தங்களுடைய நிலை அறிந்து அதற்கேற்றவாறு சூழலை மாற்றிக் கொண்டனர். எனவே, இந்த அறிவிப்பு அனைத்து விவசாயிகளுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வாக்குறுதிபடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என எச்சரிக்கை விடுத்தார்.

