மாநில உரிமையை காங்கிரஸ் ஒரு போதும் விட்டுக் கொடுக்காது - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் ஒருபோதும் குதிரைப் பேரத்தை அனுமதிக்காது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Published : May 27, 2026 at 3:35 PM IST
சென்னை: மாநில உரிமையை தமிழக காங்கிரஸ் ஒரு போதும் விட்டுக் கொடுக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கட்சி சார்பாக கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஜவஹர்லால் நேருவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, "ஜவஹர்லால் நேருவின் 62-ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மலர் அஞ்சலி செலுத்தினோம்.
ஜவஹர்லால் நேரு சுதந்திரப் போராட்ட தியாகி. இந்த நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்தவர்.
முதல்வரின் டெல்லி பயணம் என்பது வழக்கமான ஒன்று தான். யார் முதலமைச்சராக பதவியேற்றாலும் பிரதமரை சந்திப்பார்கள். தமிழ்நாட்டின் உரிமையை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனை முதல்வர் வலியுறுத்துவார் என்று நம்புகிறோம்.
கர்நாடக அரசை எதிர்போம்
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவே செயல்படுகிறது. கர்நாடகா காங்கிரஸ் எதை செய்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் அதை ஏற்றுக்கொள்ளும் என்று பொருள் கிடையாது. இதை கடுமையாக கண்டித்தும் எதிர்த்தும் இருக்கிறோம். தமிழ்நாட்டின் உரிமையை காங்கிரஸ் ஒரு போதும் விட்டுக் கொடுக்காது.
குதிரை பேரத்தை அனுமதிக்க முடியாது
காங்கிரஸ் பேரியக்கம் ஒரு போதும் குதிரை பேரத்தை அனுமதிக்காது. கர்நாடகா, அருணாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த குதிரைப் பேர அரசியலை காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. அதே அளவுகோல் தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்.
ஐந்து மாநில தேர்தலுக்காக பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை உயர்த்தாமல் வைத்திருந்தனர். தேர்தல் முடிந்தவுடன் விலையேற்றம் செய்வார்கள் என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம். தற்போது அதுவே நடந்துள்ளது.
நாட்டிலேயே பாஜகவை கடுமையாக எதிர்க்கும் தலைவராக ராகுல் காந்தி உள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கொள்கைகளை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எதிர்த்து போராடும் ஆற்றல் ராகுல் காந்திக்கு உள்ளது" என்றார்.

