2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழக காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை: மனம் திறந்த கே.எஸ். அழகிரி
தமிழகத்தில், குதிரை பேரம், கழுதை பேரம் என எதுவும் நடைபெறவில்லை என கே.எஸ் அழகரி தெரிவித்தார்.

Published : July 3, 2026 at 7:28 PM IST
தஞ்சாவூர்: கடந்த 2036 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழக காங்கிஸ் கட்சியினர் விரும்பவில்லை என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகரி தெரிவித்துள்ளார்.
ரயில் மறியல் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரின் முடிவாக உள்ளது.
காவிரி நீர் தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை. மேகதாது அணை கட்டப்பட்டால் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் கர்நாடகாவில் நிலமை அப்படி இல்லை. அங்குள்ள அரசியல் கட்சிகள் கர்நாடக மக்களுக்காக அவர்கள் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்கிறார்கள். பாமக, திமுக கர்நாடகத்தில் இருந்தாலும், அங்குள்ள பாமக, திமுக, அங்கு அணை கட்ட வேண்டும் என்று தான் கூறும்.
பாமக தலைவர் அன்புமணி, இந்த விவகாரத்தில் ராகுல் தலையிட வேண்டும் என கூறுவது மோடியை, அமித்ஷாவை மகிழ்விக்கவே தவிர இதில் உண்மையான அக்கரையோடு அவர் பேசவில்லை. அவரும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவே விரும்புகிறார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதை திமுகவினர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூற கூடாது. மாறாக அதற்கு உரிய பதில்களை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தை திமுக நேர்மையோடு எதிர்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
நீட் தேர்வு தொடர்பான கேள்விக்கு, "நீட் தேர்வை அரசியல் ஆக்க தேவையில்லை. காரணம் நீட் தேர்வை எந்த மாநிலம் நடத்த விரும்புகிறதோ அந்த மாநிலம் நடத்திக் கொள்ளலாம், விரும்பாத மாநிலங்களுக்கு அது தேவையில்லை என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு" என்றார்.
மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதை போல ஆளுநர் அர்லேக்கர் நேற்று மதுரையில் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, "அங்கு அந்த வேலை நடக்காவிட்டால் தானே, அவர் அந்த வேலையை தானே செய்வதாக கூறியிருக்கிறார். அந்த வேலை முடிந்து விட்டால் அவர் ஏன் அதை போய் செய்ய போகிறார்" என்றார்.
மேலும் பேசிய அவர், "தமிழகத்தில், குதிரை பேரம், கழுதை பேரம் என எதுவும் நடைபெறவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக, பிற கட்சி எம்எல்ஏக்களை முழுமையாக வாங்கி அப்படியே இவர்கள் மந்திரிசபை அமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாராளுமன்றத்தில் கூட இப்படி தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எம்.பிக்களாக பாஜகவிற்கு வந்துள்ளனர்.
கடந்த கால திமுக ஆட்சியில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள் தான். ஜெயலலிதா ஆட்சியில் கூட அப்படி தான். வெற்றி பெற்ற பிறகு, உங்களுக்கு செய்ய வேண்டியதை செய்கிறேன் என்கிறார்கள். அதுவே ஒரு ஜனநாயக தன்மை தானே. இதில் குறையே சொல்ல முடியாது" என்றார்.
மேலும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், பெரும்பாலான தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு, திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் விரும்பமில்லை என்றும், டெல்லி தலைமை எடுத்த முடிவு தான் திமுகவுடன் கூட்டணி என்றும் அழகிரி கூறினார்.

