ETV Bharat / state

தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

இந்த மசோதா, சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான 8-ஆம் தேதியன்று ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 7:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்ட திருத்த மசோதாவை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில், "தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத்தின் நோக்கம், தமிழகத்தை தொழில் முதலீட்டுக்கு உகந்த முன்னுரிமை மாநிலமாக நிலை நிறுத்துவதற்காக, வணிகம் செய்வதை எளிதாக்கும் சூழலை உருவாக்கும் வகையில், சீரமைக்கப்பட்ட வெளிப்படையான மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒழுங்குமுறை அனுமதிகளை வழங்குவதாகும்.

2036 ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலர் அளவை எட்டும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்டும் வகையில், நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தவும், முதலீடுகள் செய்வதை எளிதாக்கவும், ஒருங்கிணைந்து கண்காணிக்கவும், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை அமைப்பது அவசியமாகிறது. இதற்காக, தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத்தை திருத்துவதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த சட்டத்தின் 11 ம் பிரிவை திருத்துவதன் மூலம், முதலீட்டுக்கான விண்ணப்பங்களை செயல்முறைப்படுத்த காலவரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி தற்போதுள்ள காலவரம்பு இனிமேல் 21 நாட்களாக நிர்ணயிக்கப்படும். அதன்படி, கோரப்பட்டுள்ள அனுமதிகளுக்கான இறுதி உத்தரவை இந்த குறுகிய காலத்திற்குள் பிறப்பிக்க வேண்டும். இந்த 21 நாட்களை கணக்கிடும்போது எந்தவொரு விடுமுறை நாட்களையும் கணக்கில் எடுக்கக் கூடாது.

தொழில் முதலீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்தல், அவற்றை முடிவு செய்யும் நடைமுறை, இதுதொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தல், கூடுதல் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான காலவரம்பு ஆகியவற்றுக்கான ஆணைகளை பிறப்பிக்கலாம்.

முழுமையான விவரங்களுடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பம் வந்த நாளில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள், கோரப்பட்டுள்ள அனுமதிக்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். விண்ணப்பம் முழுமையாக இல்லாமல் இருந்தால், கூடுதல் தகவல் கோரப்பட்டு, அது தரப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் அனுமதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை இனிமேல், மாநில ஒற்றைச்சாளர குழுவினால் விதிமுறைகள் மூலம் பரிந்துரைக்கப்படும் நடைமுறை என்று மாற்றி அமைக்கப்படும்.

மேலும் இந்த சட்டத்தில் 16 -ஏ என்ற உட்பிரிவு புகுத்தப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதன் அதிகாரம் மற்றும் செயல்பணிகள் வகுத்தளிக்கப்படுகின்றன. இந்த ஆணையத்தின் தலைவராக தலைமைச் செயலாளர் இருப்பார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயலாளர், அதன் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராக இருப்பார். மேலும், 20 உறுப்பினர்கள் வரை இந்த ஆணையத்தில் நியமித்துக் கொள்ளலாம்.

முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில், வர்த்தகம் அல்லது பிற தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை 5 பேருக்கும் மிகாமல் இந்த ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளர் அழைக்கலாம். சிறப்பு அழைப்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இந்த ஆணையம், தமிழகத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகள், வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும். மேலும், இதுதொடர்பான செயல்பாடுகளை கண்காணித்து ஆய்வு செய்யும் பணியையும் இந்த ஆணையம் மேற்கொள்ளும்.

ரூ.200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன முதலீட்டை உள்ளடக்கிய முதலீடுகள், 5 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய முதலீடுகள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினரின் முதலீடுகள், அரசு அறிவிக்கை மூலம் குறிப்பிடப்படும் முதலீடுகள் போன்ற முக்கியமான முதலீடுகளின் முன்னேற்றத்தை ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் தேவையான அனுமதிகள், ஊக்கத் தொகைகள், பிற ஒப்புதல்களை உரிய காலத்திற்குள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், மறுமுதலீடு ஆகியவற்றையும் ஆய்வு செய்து எளிதாக்க வேண்டும்.

வணிகச் செயல்பாட்டை தொடங்காத திட்டங்களுக்காக, தமிழ்நாடு தொழில் முன்னேற்று நிறுவனம் உள்ளிட்ட அரசு முகமைகளால் ஒதுக்கப்பட்ட தொழில் நிலங்களின் ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க வேண்டும். முதலீடுகளுக்கு தடையாக உள்ள அமைப்பு ரீதியான சிக்கல்களை கண்டறிந்து, அதை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா, சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான 8-ஆம் தேதியன்று ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.