ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் போராட்டம் - தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி

அதிமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து குரல் எழுப்பியும் தங்களுக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கப்படுவதாக தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார்.

தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சாலையூர் சங்கர் பேட்டி
தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சாலையூர் சங்கர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 1:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் நிலவும் அவலநிலை குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தாம்பரம் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையில் அவசர மாமன்றக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. துணை மேயர் காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மற்றும் திமுக, அதிமுக, சுயேச்சை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 70 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சாதாரண மற்றும் அவசர விஷயங்கள் என மொத்தம் 344 தீர்மானங்கள் மாமன்றத்தின் ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மேலும் பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர். குறிப்பாக மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் தெருநாய்களின் தொல்லை பல மடங்கு அதிகரிப்பது குறித்து குற்றம்சாட்டினர்.

தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையிலான கூட்டம்
தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தலைமையிலான கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தெருநாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை பணிகளை மேற்கொண்டிருந்தால் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும், முறையாக கருத்தடை செய்யாததே தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கூறினர். தொடர்ந்து, இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதேபோல் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வார்டுகளிலும் மழைநீர் கால்வாய்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 51வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையான மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் கூட முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவித்தனர்.

சேலையூரில் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, குடிநீர் வழங்கப்படாத நிலையிலும், குடிநீர் கட்டணம் மட்டும் தொடர்ந்து வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.

5வது வார்டில் உள்ள ஓஎஸ்ஆர் நிலத்தில் தனிநபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று கட்டடம் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், மாநகராட்சிக்கு சொந்தமான அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம்
தாம்பரம் மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையே தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், நிதி ஒதுக்கீட்டில் தங்களது வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சாலையூர் சங்கர் தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சாலையூர் சங்கர், “கடந்த ஆட்சிக் காலத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு உலக வங்கியில் கடன் கேட்டுள்ளோம் என்று சம்பந்தமில்லாத பதிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: FQL மற்றும் கிரிப்டோகரன்சி மோசடி வழக்குகள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் - டி.ஜி.பி அதிரடி உத்தரவு

கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒரே நிறுவனம் தொடர்ந்து டெண்டர் எடுத்து வருகிறது. அது தொடர்பாக கேள்வி எழுப்பினாலும் உரிய பதில் அளிக்கவில்லை. மாநகராட்சியில் கழிவுநீர் மற்றும் சேற்றை அகற்றுவதற்காக வயதானவர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தும் நிலை உள்ளது.

அதிமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த நிமிடம் வரை அதிமுக கவுன்சிலர்களை விட திமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு தான் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பலமுறை போராட்டங்கள் நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இங்குள்ள அவலநிலையை மக்களுக்கு எடுத்துக்கூற, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுடன் தாம்பரம் மாநகராட்சியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.