குழந்தையின் இறப்பில் சந்தேகம்; உடலை தோண்டி எடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ் - நடந்தது என்ன?
உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே குழந்தையின் உயிரிழப்பு இயற்கை மரணமா? அல்லது வேறு காரணமா? என்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published : July 7, 2026 at 4:15 PM IST
திருநெல்வேலி: காவல்துறைக்கு தெரியாமல் இறந்த பச்சிளம் குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட நிலையில், இறப்பில் சந்தேகம் எழுந்ததால் குழந்தையின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த ஜெயபாண்டி-செல்வி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழப்பாட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு மூன்று வாரங்களுக்கு முன் மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தை கடந்த ஐந்து தினங்களுக்கு முன் திடீரென இறந்துவிட்டதாக கூறப்படுகிறது . இதனையடுத்து ஜெயபாண்டி செல்வி தம்பதியினர் அந்த குழந்தையை தாங்கள் பணிபுரியும் செங்கல் சூளையின் அருகில் உள்ள முட்புதரில் புதைத்து விட்டு மதுரைக்கு சென்று விட்டனர்.
அதேசமயம் குழந்தையின் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல் அவசர அவசரமாக காட்டு பகுதியில் அடக்கம் செய்ததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் பரவியது. இதையடுத்து கீழப்பாட்டம் கிராம நிர்வாக அலுவலர் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வருவாய்த்துறை, மருத்துவத்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே குழந்தையின் உயிரிழப்பு இயற்கை மரணமா? அல்லது வேறு காரணமா? என்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் கசிந்தது எப்படி?
இதுகுறித்து காவல்துறை கூறிய தகவலின் பேரில் நமக்கு கிடைத்த விவரம் வருமாறு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி கர்ப்ப காலத்தில் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்ப கால சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலை நிமித்தமாக திருநெல்வேலிக்கு வந்துள்ளார். எனவே இறுதிக்கட்டத்தில் திருநெல்வேலியில் அவர் சிகிச்சையை தொடர்ந்துள்ளார். தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையில் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைக்கு அவர் சென்று வந்ததால் அங்கிருந்த செவிலியர்கள் குழந்தையின் பிறப்பு குறித்து தெரிந்து கொள்வதற்காக செல்வியை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது செல்வி உடல் நலம் சரியில்லாமல் குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில் இறந்த விட்டதாக விவரத்தை கூறியுள்ளார். அதற்கு ஏன் குழந்தை இறந்ததை தங்களிடம் சொல்லவில்லை என செவிலியர்கள் கேட்டுள்ளனர்.
குழந்தை இயற்கையாக மரணமடைந்திருந்தாலும் கூட அது குறித்து உரிய தகவலை அளிக்காமல் அவசர அவசரமாக குழந்தையை அடக்கம் செய்தால் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை எடுத்து அரசு மருத்துவர்கள் அளித்த தகவலின் பெயரிலேயே காவல்துறை இந்த விவகாரத்தில் விசாரணை இறங்கியது. அதன் மூலம் குழந்தை அவசர அவசரமாக புதைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதன் பிறகே குழந்தையை தோண்டி எடுக்கும் முடிவுக்கு காவல்துறை வந்துள்ளனர்.

