சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி; மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.

Published : February 27, 2026 at 8:06 AM IST
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
2025 முதல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவரும் எம்.எம் ஶ்ரீவஸ்தவா, 2026ம் ஆண்டு மார்ச் 05ம் தேதி ஓய்வுபெற உள்ளார்.
இதையடுத்து, கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி 2016ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பின்னர், 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்க்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக, மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2025 -ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி வரை ஓராண்டு காலம் அவர் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். பின்னர், உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைபடி, கே.ஆர் ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

இதையடுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மணீந்தர மோகன் ஶ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2025ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் வரும் மார்ச் 5 -ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து, கொலிஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், அரவிந்த் தர்மதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முறைப்படி பொறுப்பேற்று கொள்வார்.

