“சென்னை மக்களே.. புதிதாக பிறக்கவுள்ள ஆமைக் குஞ்சுகளை வரவேற்போம்” - சுப்ரியா சாகு அழைப்பு
ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைகளை தூய்மையாகவும், முட்டையிடும் ஆமைகளுக்கு தொந்தரவின்றி பாதுகாப்பாக வைத்திருப்போம் என வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published : January 5, 2026 at 8:26 PM IST
சென்னை: மெரினாவில் புதிதாக பிறக்கவுள்ள ஆமைக் குஞ்சுகளை வரவேற்போம் என தமிழக அரசின் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு அழைப்பு விடுத்துள்ளார்.
உலகில் அதிகளலான உயிரினங்கள் கடலில் தான் உள்ளன என்று அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டாலும், கடலின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஆமை இனங்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஊர்வன இனத்தை சேர்ந்த கடல் ஆமைகள், தன் வாழ்நாள் முழுவதையும் கடலிலேயே கழித்தாலும், நிலத்தில்தான் தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கிறது.
கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட வகையான கடல் ஆமைகள் உலகில் உள்ளதாகக் கூறப்பட்டாலும், கடல் ஆமைகள் தன் இனப்பெருக்கத்தை கடற்கரையில்'தான் மேற்கொள்கிறது. இனப்பெருக்கத்திற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, முட்டையிடுவதற்காக ஆமைகள் கடற்கரைக்கு வருகிறது.
டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையில் கடற்கரை ஓரங்களில் ஆமைகள் முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்வது வழக்கம். அப்படி கரைக்கு வரும் ஆமைகள், மணலில் குழி தோண்டி, முட்டை போட்டு மூடி வைத்து செல்லும். ஒரு ஆமை கிட்டத்தட்ட 140 - 170 முட்டைகள் வரை இடும். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் ஆமைகள் முட்டையிடும் காலம் தற்போது தொடங்கியுள்ளது.
அதன்படி தமிழ்நாடு கடற்கரை ஓரங்களில், ஆலிவ் ரிட்லி வகை உள்ளிட்ட பல்வேறு வகை ஆமைகள் இட்டுச்சொல்லும் முட்டைகளை சேமிக்கும் வனத்துறையினர் நாய், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறையினர் சார்பில் மூங்கில் குச்சிகளால் அமைக்கப்பட்டும் ஆமை குஞ்சிகள் பொரிப்பகத்தில் வைக்கப்படுகிறது. இந்த முட்டைகளிலிருந்து 40 முதல் 45 நாட்களுக்கு பிறகு ஆமைக் குஞ்சுகள் வெளிவந்த பிறகு, அவற்றை வனத்துறையினர் பத்திரமாகக் கடலில் விடுவார்கள். இதற்காக, பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் மற்றும் பழவேற்காடு கடற்கரைகளில் ஆமை முட்டைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Chennai let’s welcome the first set of turtle eggs on the Marina Beach as the nesting season begins. An extraordinary moment reminding us about the miracle of nature. Look at the tracks on the sand marking the nesting by turtles. Lets keep beaches clean and undisturbed
— Supriya Sahu IAS (@supriyasahuias) January 5, 2026
Did you… pic.twitter.com/KDHFnOt5nU
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த ஆமை, முட்டைகளை இட்டுச் சென்றுள்ளது. இது ஆண்டுதோறும் நடைபெற்றும் வழக்கமான ஒரு நிகழ்வு என்றால், புதிதாக வரவுள்ள ஆமைக்குஞ்சுகளை வரவேற்போம் என வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
| இதையும் படிங்க: ஆக்ரோஷமாக விரட்டிய யானை; வீட்டுக்குள் புகுந்து தப்பிய சிறுவன் |
இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மக்களே, ஆமைகளுக்கான இனப்பெருக்கப் பருவம் தொடங்குவதையொட்டி மெரினா கடற்கரையில் ஆமைகள் முட்டையிடத் தொடங்கியுள்ளன. புதிதாக பிறக்கவுள்ள ஆமைக் குஞ்சுகளை வரவேற்போம். இது இயற்கையின் அற்புதத்தை நமக்கு நினைவூட்டும் ஒரு அசாதாரண தருணம். ஆமைகள் முட்டையிட்டதை குறிக்கும் தடங்களை, கடற்கரை மணல் பரப்பில் பார்க்க முடிகிறது. ஆகவே கடற்கரைகளைத் தூய்மையாகவும், முட்டையிடும் ஆமைகளுக்கு தொந்தரவின்றிப் பாதுகாப்பாக வைத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சென்னை கடற்கரைகளில் குஞ்சு பொறிக்கும் ஆமைகள், பல ஆண்டுகளுக்குப் பிறகு பரந்த பெருங்கடல்களைக் கடந்து, அவை தாங்கள் பிறந்த அதே கடற்கரைக்கே முட்டையிடுவதற்காக திரும்பி வருவதாகவும், இது நம்ப முடியாத இயற்கை செயல்பாடு” என்றும் சுப்ரியா சாகு வியப்புடன் தெரிவித்துள்ளார்.

