'ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக'- தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர் என்பதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Published : May 29, 2026 at 5:31 PM IST
சென்னை: மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று பெறப்பட்ட தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்கள் மீது அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தவிதமான முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது. அத்துடன், தீர்ப்பின் இறுதியில் அம்பேத்கரின் வாசகத்தையும் உச்சநீதிமன்றம் மேற்கோள்காட்டியிருந்தது.
ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்த மசோதாக்களில் தமிழ்நாட்டில் இயங்கும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநருக்கு பதிலாக மாநிலத்தின் முதலமைச்சரே வேந்தராக இருப்பார் என்ற மசோதாவும் ஒன்று. இந்த நிலையில், முதலமைச்சரே பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்பதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அணமையில் கூறியிருந்ததற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அவ்வாறு தான் கூறவில்லை என்றும், முதலமைச்சரே முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில், மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பைச் செயல்படுத்த தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக!
— CPIM Tamilnadu (@tncpim) May 29, 2026
“ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்து பவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்” என்பது சட்ட மேதை அம்பேத்கரின் மணி வாசகங்களில் ஒன்று.
மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில்… pic.twitter.com/CyuDXlqs5m
இதுகுறித்து அந்த கட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்” என்பது சட்ட மேதை அம்பேத்கரின் மணி வாசகங்களில் ஒன்று.
| இதையும் படிங்க: இருமொழிக் கொள்கை இந்த மண்ணுக்கானது, எங்கள் மாணவர்களுக்கானது: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி |
மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும். மாநிலங்களில் அரசு மாறலாம், ஆனால் மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும். இதில் சமரசத்திற்கு இடமில்லை. மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்போதைய கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயனும் ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

