மக்களின் நம்பிக்கையை பெறுவதே வழக்கறிஞர்களின் வெற்றி: உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா அறிவுரை
"ஒரு ஜூனியர் வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்றவுடன், மூத்த வழக்கறிஞர் தனக்கு என்ன செய்வார் என்று எதிர்பார்க்க கூடாது. மாறாக, தாங்கள் அந்த அலுவலகத்திற்காக என்ன செய்ய முடியும் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்"

Published : July 8, 2026 at 10:29 PM IST
கோயம்புத்தூர்: மக்களின் நம்பிக்கையை பெறுவதே வழக்கறிஞர்களின் வெற்றி என சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா அறிவுரை வழங்கினார்.
கோவை அரசு சட்டக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், "நான் 1983 முதல் 1988 வரை இதே கல்லூரியில் பயின்றேன் என்பதை இங்கு பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.
பல மூத்த வழக்கறிஞர்களையும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் உருவாக்கிய பெருமை, கோவை சட்டக்கல்லூரிக்கு உண்டு.
தற்போதைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. நூலகங்கள் மட்டுமின்றி இணையம் மூலமாகவும் சட்ட விவரங்கள் அனைத்தும் இன்று விரல் நுனியில் கிடைக்கிறது.
கடந்த 38 ஆண்டுகளில் பல புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதால், வழக்கறிஞர்கள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது, புதிய சட்ட மாற்றங்களை அறிந்துகொள்ள தங்களது நேரத்தை ஒதுக்க வேண்டும்" என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "வாடிக்கையாளர்களாகிய மக்கள், வழக்கறிஞர்களை வழக்கு விஷயமாக அழைக்கும் போது, வேலைப் பளுவின் காரணமாக பலரால் அழைப்பை ஏற்க முடியாமல் போகலாம்.
அந்த சமயங்களில், குறுஞ்செய்தி மூலமாவது அவர்களுக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும். இதுதான், வழக்கறிஞர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
நேர்மையுமே, சரியான தகவல் தொடர்புமே மக்களின் நம்பிக்கையை பெற்றுத் தரும். மக்கள் வைக்கும் நம்பிக்கைதான், வழக்கறிஞர்களின் வெற்றி" என நீதிபதி மோகனா தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "1980-களில் நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. 9 பெண்கள் தேர்வு எழுதினால் 4 பேர் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலை இருந்தது.
தற்போது நிலைமை பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. மெய்நிகர் (Virtual) நீதிமன்றங்கள் வந்த பிறகு, வழக்கறிஞர்கள் எங்கிருந்தபடியும் பணியாற்ற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நேரத்தை முறையாக திட்டமிட்டு குடும்பத்திற்கும், தொழிலுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். ஒரு வழக்கறிஞர் தனக்கான நிலையான இடத்தை பிடிக்க, குறைந்தபட்சம் 7 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகும்.
அலுவலகத்திற்குச் சென்றவுடன் மூத்த வழக்கறிஞர் (Senior) தங்களுக்கு என்ன செய்வார் என்று எதிர்பார்ப்பதை விட, தாங்கள் அந்த அலுவலகத்திற்காக என்ன செய்ய முடியும் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்" என உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா கூறினார்.

