ETV Bharat / state

ராணிப்பேட்டையில் பலத்த காற்றுடன் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

நள்ளிரவு தொடங்கி விடியற்காலை வரை மழை பெய்தது. ஒரே இரவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 139.4 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது.

ராணிப்பேட்டையில் பொழிந்த திடீர் மழை
ராணிப்பேட்டையில் பெய்த திடீர் மழை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2026 at 10:14 AM IST

1 Min Read
Choose ETV Bharat

ராணிப்பேட்டை: கடந்த சில நாட்களாவே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று (மே 27) இரவு திடீரென மழை பெய்தது. நீண்ட நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து, மக்களை வாட்டி வதைத்து வந்த சூழலில், நேற்று மாலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இதனால் வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது. மேலும், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், மக்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியாக 139.4 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மழையால் தெருக்களில் தேங்கிய மழை நீர்
மழையால் தெருக்களில் தேங்கிய மழை நீர் (ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக, மாவட்டத்திலேயே அதிகபட்ச மழை ஆற்காடு பகுதியில் பதிவாகி உள்ளது. சுமார் 35.4 மிமீ அளவுக்கு அங்கு மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சோளிங்கரில் 30.8 மிமீ அளவு மழை பதிவாகி உள்ளது. ஆனால் மாவட்டத்தின் கலவை பகுதியில் மழை பதிவாக இல்லை.

கத்தரி வெயிலால் மக்கள் கடும் பாதிப்படைந்து வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் இப்போது வரை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த காற்றுடன் கூடிய மழை விடியற்காலை பெய்ததால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மாவட்டத்தின் குறிப்பிட்ட சில தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுடன் பயணம் செய்தனர்.

இதையும் படிங்க: ராஜினாமா செய்துவிட்டு வரும் எம்.எல்.ஏக்களை சேர்த்துக்கொண்டால் அவப்பெயர் உண்டாகும் - தவெகவிற்கு திருவாளவன் அறிவுரை

தொடர்ந்து, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்த காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட சில பகுதிகளில் சில மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடியிருப்புவாசிகள் சற்றே சிரமங்களுக்கு ஆளாகினர்.

மேலும், ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பயணிக்கும் போது முன்னெச்சரிக்கை உடன் பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.