ETV Bharat / state

பள்ளிக்கரணையில் திடீர் தீ விபத்து; தீக்கிரையான வாகனங்கள்

தீ விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தீ விபத்து நடைபெற்ற பகுதி
தீ விபத்து நடைபெற்ற பகுதி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 4, 2026 at 11:18 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: பள்ளிக்கரணையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியை அடுத்துள்ள பள்ளிக்கரணை பாலாஜி நகர் பகுதியில் காலியிடத்தில் போடப்பட்டிருந்த எலக்ட்ரானிக் உதிரி பாகங்களின் கழிவுகள் மற்றும் குப்பையில் இன்று (ஜூன் 04) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவிய நிலையில் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும், மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும் வாகனங்களும் அவ்விடத்தில் இருந்ததால் வாகனங்களுக்கும் தீப்பரவியது.

தகவலறிந்து இரண்டு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இருசக்கர வாகனங்கள், கார்கள் தீயில் எரிந்து தீக்கரையாகின. தீயில் எரிந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கலப்பட நெய் விவகாரம்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.60 லட்சம் பறிமுதல்

தீ விபத்தால் வேளச்சேரி, பள்ளிக்கரணை, புழுதிவாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் போன்ற பகுதிகள் புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. பள்ளிக்கரணை- வேளச்சேரி இடையே கடும் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளதால் ஐடி நிறுவன ஊழியர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனிடையே தகவலறிந்து வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே, கொழுந்துவிட்டு எரிந்து வரும் தீயை அணைப்பதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து சிக்கி 100- க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.