எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள்: புறநகர் மின்சார ரயில் சேவை மேலும் குறைப்பு
வழக்கமாக தினசரி இரு மார்க்கத்திலும் 204 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

Published : February 24, 2026 at 1:46 PM IST
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் திருத்தப்பட்ட கால அட்டவணையை தயவுசெய்து சரிபார்த்து செல்ல வேண்டுமென சென்னை கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில் இயக்கத்தில் சில மாற்றங்களை செய்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, சென்னை எழும்பூர் - செயின்ட் தாமஸ் மவுன்ட் மற்றும் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே EMU ஷட்டில் சேவைகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ஏசி புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், கும்மிடிப்பூண்டி - தாம்பரம் வரை இயக்கப்பட்ட ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மின்சார ரயில்கள் செயின்ட் தாமஸ் மவுன்ட் மற்றும் எழும்பூர் நோக்கிச் செல்லும்போது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

அதேபோல், எழும்பூரிலிருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு நோக்கிச் செல்லும்போது சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நீண்டகால உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அவசியமான இந்த தற்காலிக செயல்பாட்டு மாற்றத்தின்போது, பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் திருத்தப்பட்ட கால அட்டவணையை தயவுசெய்து சரிபார்த்து செல்ல வேண்டும் என சென்னை கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரயில் சேவை மேலும் குறைப்பு: இதனிடையே, வழக்கமாக தினசரி இரு மார்க்கத்திலும் 204 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கையானது கடந்த வாரம் 164 ஆக குறைக்கப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, 115 ரயில்கள் மட்டுமே இருமார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன.

மின்சார ரயில் சேவை போக்குவரத்து பாதிப்பு காரணமாக அலுவலகம், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரயில் சேவை பாதிப்பு காரணமாக, தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்திருக்கிறது.
இதனை கருத்தில்கொண்டு, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் இதனால் அவதியுறும் மக்கள், ரயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

