EXCLUSIVE | சிக்னல் இல்லை... காட்டில் நடக்கும் தபால் சேவை; இணைய சேவைக்காக ஊழியர்கள் ‘இணையற்ற’ போராட்டம்
சின்ன மைலார் காணி குடியிருப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள WiFi வசதி உதவியுடன் தபால் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Published : April 29, 2026 at 10:51 PM IST
-By இரா.மணிகண்டன்
"நெட் இல்லையென்றால் வேலையே ஓடாது. ஆகையால், தபால் அலுவலகத்திற்கு என்று தனியாக இணையதள சேவை வேண்டும்"
மக்களின் அன்றாட பணப்பரிவர்த்தனையில் தொடங்கி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவைகள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகி 'வளர்ந்த பாரதம்' (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் எவ்வளவு முக்கியமோ, அந்த வரிசையில் செல்போனும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணைந்துவிட்டது எனலாம்.
டிஜிட்டல் காலத்தில் இப்படியா?
அந்த வகையில், மத்திய அரசின் பழமையான துறைகளில் ஒன்றான தபால் துறையும் முழுவதுமாக டிஜிட்டல் மையமாக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்களில் புதிய கணக்கு தொடங்குவது, பணப்பரிவர்த்தனை, பதிவுத்தபால் அனுப்புவது உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வாடிக்கையாளர்களும் G-Pay, PhonePe உள்ளிட்ட சேவைகளின் வாயிலாகவே பணத்தை அனுப்புகின்றனர். ஒரு நிமிட வேலை என்பதால், தபால் துறையிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இப்படி, இணையதள சேவை இல்லாமல் தபால் துறை இயங்காது என்ற சூழலில், நெல்லையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் நெட்வொர்க் சேவை இல்லாததால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நாள்தோறும் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
காட்டில் நடக்கும் தபால் சேவை
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ளது மேற்குத் தொடர்ச்சி மலை. இங்கு மாவட்டத்தின் பிரதான அணையான காரையாறு அணை இங்கு தான் உள்ளது. அதைச் சுற்றி அகஸ்தியர் காணி குடியிருப்பு சின்ன மைலார், பெரிய மயிலார் ஆகிய காணி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதுதவிர அணையின் மேல் பகுதியில் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் மிக அடர்ந்த காட்டுக்குள் இஞ்சிக்குழி காணி பழங்குடி கிராமமும் உள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் காணி பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் வசதிக்காக காரையாறு அணைக்கு அருகில் தபால் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கிறிஸ்துராஜா(57) என்பவர் கிளை அஞ்சலக அதிகாரியாகவும், இசைகிருஷ்ணன்(21) என்பவர் தபால்காரராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் மொத்தம் 600 கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. காணி பழங்குடி மக்கள் சேமிப்புக் கணக்கு மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். இதுதவிர தபால் அனுப்புவது, முதியோர் ஓய்வூதியம் பெறுவது என பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காரையாறு முழுக்க முழுக்க வனப்பகுதி என்பதால், இங்கு இணையதள வசதி கிடையாது. பாபநாசத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் லோயர் டேம் எனப்படும் பாபநாசம் கீழணை அமைந்துள்ளது. அப்பகுதி வரை தான் செல்போன் டவர் இருக்கும், அதற்கு மேல் சென்றால் டவர் கிடைக்காது.
ஆனால், பாபநாசத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தூரம் பயணம் செய்து தான் காரையாறை அடைய முடியும். எனவே காரையாறில் வசிக்கும் மக்கள் தங்களது படிப்பு மற்றும் பிற தேவைகளுக்காக இணையதள சேவையை பயன்படுத்த வேண்டுமென்றால், 10 கி.மீ தூரம் கீழணை பகுதிக்கு தான் வர வேண்டும் என்று நிலை உள்ளது.
ஆன்லைன் சேவை கட்டாயம்
இதுபோன்ற சூழலில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை காரையாறு தபால் நிலையத்தில் ஆன்லைன் சேவை கட்டாயமாக்கப்படவில்லை. அதனால், நெட்வொர்க் இல்லாததை ஊழியர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், யாரும் எதிர்பாராத அந்த நாளில் காரையாறு தபால் நிலையத்திலும் ஆன்லைன் சேவையைக் கட்டாயமாக்கியது இந்திய அஞ்சல் துறை.

அதன்படி, தபால் துறை சார்பில் பிரத்யேக மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே ஊழியர்கள் அன்றாட பணிகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக, கணக்கு தொடங்குவது, பணப்பரிவர்த்தனை, தபால் பதிவு உள்ளிட்ட அன்றாட கணக்கு வழக்குகளைப் பராமரிப்பது இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இணையதள வசதி இருந்தால் மட்டுமே மொபைல் ஆப்பை திறக்க முடியும். ஆனால், தபால் துறை சார்பில் காரையாறு தபால் நிலையத்துக்கு இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
WiFi வசதிக்காக ஊர் மக்களின் உதவியை நாடும் ஊழியர்
இதனால், ஆன்லைன் சேவை கட்டாயமாக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே அன்றாட பணிகள் முடங்கி, தபால் நிலைய ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். என்னதான் செய்வது என்று திகைத்திருந்த நேரத்தில்தான், சின்ன மைலார் காணி குடியிருப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அரசு சார்பில் இலவசமாக WiFi வசதி இணைப்பு கொடுக்கப்பட்ட செய்தி கிறிஸ்துராஜாவின் செவிக்கு எட்டுகிறது.
இதையடுத்து அங்குள்ள மக்களை சந்தித்த கிறிஸ்துராஜா, இணைய வசதி இல்லாமல் தான் படும் சிரமத்தை எடுத்துக் கூறி அவர்களின் உதவியை நாடுகிறார். அதைக் கேட்ட மக்களும், மண்டபத்தில் வைத்து WiFi வசதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்க முன்வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக காரையாறு தபால் நிலையம் சின்ன மைலார் சமுதாய நலக்கூடத்தில் தான் இயங்கி வருகிறது.

இதற்காக தினமும் காலை 10 மணிக்கெல்லாம் அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் மற்றும் சீல் வைக்கப்படும் மை உட்பட அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு, 500 மீட்டர் தூரத்தில் உள்ள சின்ன மைலார் திருமண மண்டபத்திற்கு கிறிஸ்துராஜாவும், இசை கிருஷ்ணனும் புறப்படுகிறார்கள்.
வேலை மீதுள்ள அளப்பறியாத காதல்
முன்பெல்லாம், காரையாறு தபால் நிலையத்திலிருந்து சின்ன மைலார் செல்ல வேண்டும் என்றால் ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். தண்ணீர் அதிகமாக செல்லும்போது ஆற்றைக் கடப்பது என்பது சிரமம். தற்போது கோடைக்காலம் என்பதால், ஆற்றில் குறைவான தண்ணீரே செல்கிறது. இதனால் மரத்தால் செய்யப்பட்ட தொங்கு பாலத்தில் ஆற்றலைக் கடந்து செல்கிறார்கள்.
என்னதான், கிறிஸ்துராஜா மீதும் அப்பகுதி மக்கள் மீதும் தபால் துறை அக்கறை காட்டவில்லை என்றாலும்கூட, வேலை மீதுள்ள அளப்பறியாத காதலால் துளியும் துவண்டுபோகாத கிறிஸ்துராஜா, நாள்தோறும் சின்ன மைலாருக்கு பயணப்படுகிறார். எனவே, கிறிஸ்துராஜா மற்றும் இசைகிருஷ்ணாவின் அர்ப்பணிப்பான கடமையை அறிந்து கொள்ள ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் காரையாருக்கு பயணப்பட்டோம்.
பாபநாசத்தில் இருந்து மலை, காடுகளை கடந்து காரையாருக்கு பயணித்தோம். அங்கு, இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே அமைந்திருந்த காணி பழங்குடி கிராமங்கள் அழகாகக் காட்சியளித்தன. அங்கிருந்து நேராக சின்ன மைலார் திருமண மண்டபத்திற்கு சென்றோம். மண்டபத்தினுள் அமைக்கப்பட்டுள்ள மோடம் அருகில் அமர்த்தபடி, கிறிஸ்துராஜா தனது அன்றாட பணிகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தார்.
தபால் ஊழியர்களின் நிலை கொஞ்சம் சிரமம் தான்
செல்போனில் சிக்னல் கிடைக்காததால், அங்கே அரசு சார்பில் பிஎஸ்என்எல் லேண்ட் லைன் வசதி ஏற்படுத்தியிருப்பதும் தெரியவந்தது. ஊர் மக்களின் ஆதரவால் அவர் இணையதள சேவையை பயன்படுத்தி வந்தாலும் கூட அதில் பல சிக்கல்கள் இருப்பதை அறிந்து கொண்டோம். அதாவது, ஊர்மக்களுக்கு என பொதுவாக அமைக்கப்பட்ட Wifi என்பதால், அதனை அதிக இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
இப்படி ஒரே நேரத்தில் அதிக நபர்கள் இணையதளத்தை பயன்படுத்துவதால் அதன் வேகமும் குறைகிறது. அதனால் அவ்வப்போது ஆன்லைன் சேவையை தொடர முடியாமல் சிரமப்படுவதாக கிறிஸ்துராஜா நம்மிடம் புலம்பினார். மேலும், தபால் நிலையத்திற்கு என்று தனியாக இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையும் கூட.
துரித நடவடிக்கை வேண்டும்
இதுகுறித்து கிறிஸ்துராஜா நம்மிடம் கூறுகையில், “இதுவரை வேலையை மேனுவலாக பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அனைத்தும் ஆன்லைன் ஆகிவிட்டது. காட்டுக்குள் இருக்கும் எனது தபால் அலுவலகத்தில் 2 மாதங்களாக ஆன்லைன் சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள சின்ன மைலார் ஊர் மக்களுக்கு Wifi வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், எங்களது தபால் அலுவலகத்தில் இணையதள வசதி இல்லை. இதுகுறித்து உயரதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். தற்போதைய சூழலுக்கு துரித நடவடிக்கை வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இணையதளம் இல்லையென்றால் வேலையே ஓடாது...
மேலும் பேசிய அவர், “இந்த தபால் நிலையத்தில் அகஸ்தியர் காணி குடியிருப்பு, சின்ன மைலார், இஞ்சிக்குழி பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கணக்கு வைத்துள்ளனர். இந்த இணையதள பிரச்சனையை தலைமை அலுவலக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன்.
| இதையும் படிங்க: EXCLUSIVE | நெல்லை மலை கிராமத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்; பழங்குடியின மக்கள் வேதனை |
ஊர்மக்களுக்கு என அமைக்கப்பட்ட இணையதள வசதியை ஏராளமானோர் பயன்படுத்துவதால் அதன் வேகம் குறைகிறது. எங்களால் எதுவும் கேட்க முடியவில்லை. அவர்களை அனுசரித்துதான் பணி செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள சூழலில் மேனுவலாகவும் எதையும் செய்ய முடியாது. இணையதளம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால், தபால் அலுவலகத்திற்கு என தனியாக இணையதள சேவை வேண்டும்” என்றார் அவர்.

கிறிஸ்துராஜா இப்படி சிரமத்தோடு கடமையாற்றுவது புதிதல்ல.. இதைவிட மிகப்பெரிய சவால் ஒன்றை அவர் மாதம்தோறும் சந்தித்து வருகிறார். அதாவது நாம் ஏற்கனவே கூறியபடி அணையில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் மிக அடர்ந்த காட்டுக்குள் உள்ள இஞ்சிக்குழி காணி குடியிருப்பில் வசிக்கிறார் 105 வயதுள்ள குட்டியம்மாள் பாட்டி. அவருக்கு அரசின் முதியோர் ஓய்வூதியம் தபால் அலுவலகம் மூலம் வருகிறது.
அந்த ஒரே ஒரு ஓய்வூதியத்தை குட்டியம்மாளிடம் கொடுப்பதற்காக, கிறிஸ்துராஜா மாதம்தோறும் தனது சொந்த பணம் ரூ.200 செலவழித்து இஞ்சிக்குழிக்கு நடந்தே சென்று வருகிறார். இதனை ஏற்கனவே சிறப்பு கட்டுரையாக ஈடிவி ஊடகத்தில் வெளியிட்டிருந்தோம். இப்படிப்பட்ட கடமை உணர்வுக்கு சொந்தக்காரர் தான் கிறிஸ்துராஜா.

