அங்கீகாரம் பெறாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது 'கிரிமினல்' நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
மாணவர்களிடம் பெரும்தொகையை வசூலித்துப் போலிப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதால், அவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

Published : July 9, 2026 at 1:18 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரமின்றி எந்தவொரு மருத்துவ கல்வி நிறுவனங்களும் இயங்கக் கூடாது என்றும், மீறி இயங்கினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள அரசாணையில், “சுகாதாரத் துறையின் கீழ் இயங்கக் கூடிய எந்தவொரு மருத்துவ கல்வி நிறுவனங்களும், மத்திய, மாநில மற்றும் பிற அமைப்புகளின் முறையான அங்கீகாரத்தை கொண்டு இயங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் கல்வி நிறுவனங்களால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே அங்கீகாரமின்றி எந்தவொரு மருத்துவ கல்வி நிறுவனங்களும் இயங்கக் கூடாது.
அதே போல், அங்கீகாரம் மற்றும் அனுமதி இல்லாத பாடப்பிரிவுகள் நடத்தப்படுவது குறித்து புகார்கள் வந்தால், அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் கல்வி நிறுவனங்களை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெறாமலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் இணைவு பெறாமலும் செயல்படும் சட்டவிரோத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனுமதியின்றி நடத்தப்படும் மருத்துவப் படிப்புகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்பு, மருந்தியல் மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகள், இயன்முறை மருத்துவம், இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய படிப்புகளை வழங்கும் சில நிறுவனங்கள் உரிய அனுமதியின்றிச் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சில நிறுவனங்கள் பொதுவான அனுமதியைப் பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட சில படிப்புகளை எவ்வித அங்கீகாரமும் இன்றி நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய போலி நிறுவனங்கள் மாணவர்களிடம் பெரும்தொகையை வசூலித்துப் போலிப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதால், அவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.
| இதையும் படிங்க: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு - அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார் மீது திமுக பரபரப்பு புகார் |
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
- மாவட்ட அளவில் முதன்மை அதிகாரியாக மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் செயல்படுவார். அவர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை, மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்.
- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை இயக்ககங்கள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகளின் பட்டியலை ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி மாவட்ட இணை இயக்குநருக்கு வழங்க வேண்டும்.
- அங்கீகாரமற்ற நிறுவனங்கள் குறித்துப் புகார்கள் வரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய ஆய்வுக்குழுவை இணை இயக்குநர் அமைத்து, நிறுவனத்தின் உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகள், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண விவரங்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு, சம்பந்தப்பட்ட போலி கல்வி நிறுவனங்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 2023 (Bharatiya Nyaya Sanhita) சட்டத்தின் கீழ் ஏமாற்றுதல், மோசடி, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தல் போன்ற பிரிவுகளில் காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேலும், அந்த நிறுவனங்களில் மேற்கொண்டு மாணவர்கள் சேருவது தடுக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி மூடப்படும்.
- மாணவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் அந்தந்த மருத்துவக்கல்வி இயக்ககங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும்.
- அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் தங்களின் அங்கீகார விவரங்கள் மற்றும் பல்கலைக்கழக இணைவுப் சான்றுகளைத் தங்களது வளாகத்திலும், இணையதளத்திலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எளிதில் அறியும் வகையில் கட்டாயம் வெளியிட வேண்டும்.
மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை செயலாளர் தனது அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.

