நேபாளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - சென்னையை சேர்ந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிய ஈடிவி பாரத் சார்பில், வசந்தகுமார் குடும்பத்தினரை தொடர்புகொண்ட போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. ஊடகங்களிடம் பேச விருப்பம் இல்லை என மறுத்துவிட்டனர்.


Published : November 5, 2026 at 7:18 AM IST
சென்னை: எவரெஸ்ட் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துகுள்ளான சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்த நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேபாள நாட்டின் சோலுகும்பு மாவட்டத்தில், உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்லும் முக்கிய மலையேற்ற வழித்தடத்தில் பெரிச்சே என்ற மலைப்பகுதி அமைந்துள்ளது. சுமார் 4,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி, எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், மலையேற்ற வீரர்கள் தங்கிச் செல்லும் முக்கிய இடமாக உள்ளது. சாலைப் போக்குவரத்து வசதி இல்லாத இந்த உயரமான மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள், மலையேற்ற வீரர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (நவ.3) காலை சுமார் 8 மணியளவில் பெரிச்சே பகுதியில் உள்ள ஹெலிபேடில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த ஃபிஷ்டெயில் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டரும், லுக்லா பகுதியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த ஏர் டைனாஸ்டி நிறுவனத்தின் ஹெலிகாப்டரும் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றுள்ளன.
சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
இரண்டு ஹெலிகாப்டர்களும் ஹெலிபேடிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் இருந்தபோது ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் இரண்டும் கீழே விழுந்து சேதமடைந்தன.
இந்த விபத்தில் ஃபிஷ்டெயில் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் பயணம் செய்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் பாலராமராமடு (47) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷைலேஷ் குமார் படேல் (49) மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி ரவீந்திர பிரஜாபதி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ஏர் டைனாஸ்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டரின் விமானி காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து நடைபெற்றதும் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள நேபாள மெடிசிட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உயிரிழந்த வசந்தகுமாரின் உடல், முதலில் லுக்லா பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூராய்வு உள்ளிட்ட நடைமுறைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு மற்றும் சட்டப்படியான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விபத்து குறித்து விசாரணை
இந்த விபத்துக்கான காரணம் குறித்து நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விபத்து நடைபெற்ற நேரத்தில் அப்பகுதியில் வானிலை தெளிவாக இருந்ததாகவும், பலத்த காற்று வீசியதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒரே ஹெலிபேடில் தரையிறங்க முயன்றபோது விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட தகவல் பரிமாற்றக் குறைபாடு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்ற முதற்கட்ட சந்தேகம் எழுந்துள்ளது.
பெரிச்சே பகுதி லுக்லா விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்தின் நேரடிக் கண்காணிப்பு எல்லைக்கு வெளியே அமைந்துள்ளதால், அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர்களை இயக்கும் விமானிகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு செயல்பட வேண்டிய நிலை இருப்பதாக நேபாள விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் முகேஷ் டங்கோல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த விமானியிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாகவும், இரண்டு ஹெலிகாப்டர்களும் எவ்வாறு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தரையிறங்க முயன்றன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடலை சென்னை கொண்டுவர ஏற்பாடுகள்
இதற்கிடையே, சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பெரம்பலூர் தெரு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் உயிரிழந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிய ஈடிவி பாரத் சார்பில், அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்ட போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. ஊடகங்களிடம் பேச விருப்பம் இல்லை என மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வசந்தகுமாரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக நேபாள நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. உடற்கூராய்வு உள்ளிட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் அவரது உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட உள்ளது.

