இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல் வழங்க நடவடிக்கை - அமைச்சர் நிர்மல் குமார்
போக்சோ குற்றவாளிகள் தாண்டிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Published : May 29, 2026 at 3:28 PM IST
சென்னை: நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டத்துறை நூலக அறையில், 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், "சட்டதுறை சார்பில் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு பணி நியமன ஆணையும், ஐந்து சட்டக் கல்லூரி பொருளாளர் பதவி உயர்வுக்கான ஆணையும் வழங்கபட்டுள்ளது.
கோவை வழக்கில் வெகுவிரைவில் நீதியை பெற்று தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் உத்தரவிடபட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் நீதிமன்றம் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். போக்சோ குற்றவாளிகள் தாண்டிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.
நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளுக்கு பரோல் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிரந்தர விடுவிப்பு குறித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து முடிவு எடுக்கபடும்.

மேகதாது அணை கட்ட பூமி பூஜை நடத்தப்படும் என கர்நாடக அரசு தெரிவித்ததை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூமி பூஜை செய்ய கூடாது என வழக்கு தொடுத்து உள்ளோம். கர்நாடக அரசு எதை செய்தாலும் சட்டப்பூர்வமாகவே செய்ய முடியும். தேவை இல்லாமல் இரு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் தனது அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இவ்வாறு செய்கிறார்.
இரு மாநில மக்களுக்கும் இடையே அமைதி தேவை. இரு மாநிலங்களுக்கும் இடையே தொழில் உறவுகள் உள்ளன. இருமாநில கொள்கைகள் உள்ளன. பொறுப்பில்லாமல் துணை முதலமைச்சர் சிவக்குமார் இவ்வாறு செய்வதை ஏற்று கொள்ள முடியாது. மேகதாது விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தேவை ஏற்படும்பட்சத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

