ETV Bharat / state

தமிழ்நாட்டில் 14 வனப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்கள் 100% அகற்றம் - மாநில அரசு தகவல்

அந்நிய மரங்கள் அகற்றியது தொடர்பாக வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ காணொலியில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 10:53 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை உள்ளிட்ட 14 வனப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்களை 100 சதவீதம் முழுமையாக அகற்றிவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்நிய மரங்கள் அகற்றியது தொடர்பாக வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ காணொலியில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், வனப்பகுதிகளில் பரவி இருக்கக் கூடிய மரங்கள் 85% அகற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட 14 வனப்பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்களை 100 சதவீதம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

இந்த அந்நிய மரங்களை அகற்ற 2024 முதல் 2026-ம் ஆண்டு வரை 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 47 கோடி கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கோரிக்கை மீது ஓரிரு நாளில் நிதி விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 100 சதவீதமும், முதுமலையில் 84 சதவீதமும் அந்நிய மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் அந்நிய மரங்கள் வளராமல் தடுக்க 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த மரங்களை விற்றதன் மூலம் 40 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அந்த தொகையை வேறு பணிகளுக்கு பயன்படுத்த மாட்டாது. அந்நிய மரங்களை அகற்றுவதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மரங்களை அகற்றிய பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு முறையாக பராமரிக்காவிட்டால் அந்த மரங்கள் மீண்டும் முளைத்து அரசு ஒதுக்கிய நிதி முழுவதும் வீணாகி விடும். அதனால் பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை தடங்கல் இல்லாமல் தொடர்ந்து பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாற்று வழியை அரசு உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், நிதியை பயன்படுத்துவதற்கான மாற்று நடைமுறை மற்றும் மரங்களை விற்பனை மூலம் கிடைத்த நிதியை பயன்படுத்துவது தொடர்பாகவும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 27 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள்; நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்துவைப்பு