ETV Bharat / state

’சம வேலைக்கு சம ஊதியம்’ 9-வது நாளாக கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்

இன்றைய தினம் ஒன்பதாவது நாளாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 5:16 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: சம வேலைக்கு, சம ஊதியம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இடைநிலை ஆசிரியர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2009 ஜூன் 1 ஆம் தேதிக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8,370, அந்த தேதிக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக ரூ.5,200 வழங்கப்படுகிறது. இந்த ஊதிய முரண்பாட்டை களையக்கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்குவோம் என திமுக தேர்தல் அறிக்கை 311-ல் வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் (ETV Bharat Tamil Nadu)

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள், சாலை மறியல், வேலைநிறுத்தம், முற்றுகை என பல்வேறு வகைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஒன்பதாவது நாளாக இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்து, அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், ”இடைநிலை ஆசிரியர்களின் எதிர்கால நலன் கருதி நல்ல முடிவை எடுப்போம்.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களை நிச்சயம் கைவிட மாட்டோம்: அடித்து கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ்

இடைநிலை ஆசிரியர்கள் எனது குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள், அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம். இது தொடர்பாக நிதித் துறையிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்குகையில், அடுத்த ஊதிய குழு வந்துவிட்டது. அதனால் ஊதியம் உயர்வு இல்லாமல் சம்பளம் குறைந்துவிட்டது. அந்த வேறுபாட்டை களைய சொல்லித்தான் இடைநிலை ஆசிரியர்கள் கேட்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நிச்சயமாக அவர்களுக்காக வாதாடுவேன். நல்ல முடிவு கிடைக்கும்” என கூறியிருந்தார்.