ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை பின்னுக்கு தள்ளி தவெக வெற்றி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 : ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் திமுக சார்பில் சிபிஐ பி. மகாலிங்கம், அதிமுக தரப்பில் சந்திர பிரபா, நாதகவின் கரிகால பாண்டியன், தவெகவின் ஏ.கார்த்தி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Published : May 4, 2026 at 1:18 AM IST
|Updated : May 4, 2026 at 8:56 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்): பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை பின்னுக்கு தள்ளி தவெக தொகுதியை பிடித்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், 85,15% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் விஐபி வேட்பாளர்கள் அதிகளவில் உள்ள தொகுதிகளில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்தில் இந்த முறை 84.85% வாக்குகள் பதிவாகி உள்ளன. இம்மாவட்டத்தில் முக்கிய தொகுதிகளில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர். இந்த ஊரின் பெயரை கேட்டதுமே அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் முத்திரையாக திகழ்கிற ஆண்டாள் கோயில் கோபுரமும், பால்கோவாவும் தான் நினைவுக்கு வரும்.
இந்த தொகுதியின் அரசியல் முகமாக அறியப்படுகிறார் தாமரைக்கனி. அதிமுகவை சேர்ந்த இவர் 1991-ல் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலேயே சுயேச்சையாக நின்று வெற்றிவாகை சூடியவர்.
தனி தொகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 1952இல் இருந்து இதுவரை 16 முறை சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அதில் 7 முறை அதிமுகவும், தலா 3 முறை திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட்டும், 2 முறை காங்கிரஸும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் அதிமுகவை சேர்ந்த தாமரைக்கனி 5 முறை வெற்றிபெற்றிருந்தார்.
2,22,367 வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் இந்த முறை 82.77% வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த முறை தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஐக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பி. மகாலிங்கம் போட்டியிட்டார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சந்திர பிரபா, தவெக சார்பில் ஏ. கார்த்தி, நாதக சார்பில் கரிகால பாண்டியன் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஷ்யாம் கிருஷ்ணசாமி உள்பட, மொத்தம் 14 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை 12,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிமுகவின் ஈ.மா. மான்ராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை கைப்பற்றினார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திர பிரபாவும், 2011ஆம் ஆண்டு தேர்தலில் சிபிஐ சார்பில் போட்டியிட்ட வி. பொன்னுபாண்டியும் இந்த தொகுதியை கைப்பற்றினர்.
முன்னிலை விவரம்
மதியம் 1 மணி நிலவரப்படி, அதிக முறை வெற்றிகளை பெற்றுள்ள அதிமுக, இந்த முறை பின்னடவை சந்தித்து வந்தது. சிபிஐச் சேர்ந்த பி. மகாலிங்கம் முன்னிலை வகித்து வந்த நிலையில், இறுதிச் சுற்று முடிவில் அவரை பின்னுக்கு தள்ளி, தவெக வெற்றி பெற்றிருக்கிறது.
| ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி - ஒரு பார்வை | ||
| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
| 2021 | ஈ.மா. மான்ராஜ் | அதிமுக |
| 2016 | சந்திர பிரபா | அதிமுக |
| 2011 | வி. பொன்னுபாண்டி | சிபிஐ |

