சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு - பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் விமானப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொறியாளர் குழுவினர் விமானத்திற்குள் ஏறி இயந்திர கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்

Published : January 11, 2026 at 5:20 PM IST
சென்னை: சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் இயந்திர கோளாறு காரணமாக தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணி அளவில் ஸ்பைஸ் ஜெட் தனியார் பயணிகள் விமானம் மும்பை செல்வதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 185 பயணிகள் உட்பட மொத்தம் 192 பேர், அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர்.
அப்போது விமானத்தை ஓடும் பாதைக்கு கொண்டு வருவதற்கு முன்பு நடைமேடையில் நிறுத்தப்பட்டு இருந்த விமானத்திற்குள் ஏறி, இயந்திரங்கள் உட்பட அனைத்தையும் விமானி சரிபார்த்துள்ளார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
தொடர்ந்து இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தின் இயந்திர கோளாறு முழுமையாக சரி செய்த பின்னரே இயக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனையடுத்து விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளையும் கீழே இறக்கி, சென்னை விமான நிலையத்தில் உள்ள ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து விமான பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், பொறியாளர் குழுவினர் விமானத்திற்குள் ஏறி இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பல மணி நேரம் ஆகியும் பழுதை சரி செய்ய முடியவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் கவுண்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த விமானம் ஒன்பது மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிப்பு வெளியானது. விமானம் தாமதம் காரணமாக பயணிகள் வெளியில் சென்று விட்டு 4 மணிக்கு வருவதாக தெரிவித்தனர். விமான நிலையத்தில் காத்திருந்த மற்ற பயணிகளுக்கு விமான நிலையத்தில் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

