ETV Bharat / state

மதுரை - கான்பூர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு

மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி, அகமதாபாத் - மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (09424) மற்றும் மங்களூரு சந்திப்பு - அகமதாபாத் சிறப்பு ரயில் (09423) ஆகியவற்றின் சேவையும் தலா 13 முறை நீட்டிக்கப்பட்டுள்ளன.

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம் (ANI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 9:49 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, மதுரை - கான்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ரயில்களின் சேவைகளின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய ரயில்வே அறிவிப்பின்படி, கான்பூர் சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில் (01925) புதன்கிழமைகளில் தொடர்ந்து இயக்கப்படும். இதன் சேவை காலம் 02.09.2026 முதல் 25.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 13 சேவைகள் இயக்கப்படும்.

அதேபோல், மதுரை - கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் (01926) சனிக்கிழமைகளில் இயக்கப்படும். இதன் சேவை காலம் 05.09.2026 முதல் 28.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம் 13 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு ரயில்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அதே நேர அட்டவணை மற்றும் நிறுத்தங்களுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேற்கண்ட இரு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிடலாம்.

மேலும், மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி, அகமதாபாத் - மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (09424) மற்றும் மங்களூரு சந்திப்பு - அகமதாபாத் சிறப்பு ரயில் (09423) ஆகியவற்றின் சேவையும் தலா 13 முறை நீட்டிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிப்பு

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட சேவைகள் ஏற்கனவே உள்ள நேரங்கள், நிறுத்தங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகள் அமைப்புடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதன்படி, தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் (06059) செப்டம்பர் 12, 19 மற்றும் 26 ஆகிய சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கமான போடிநாயக்கனூர் - தாம்பரம் சிறப்பு ரயில் (06060) செப்டம்பர் 13, 20 மற்றும் 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும்.
  • சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06045) செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய வெள்ளிக்கிழமைகளிலும், கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06046) செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும்.
  • அதேபோல், மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூர் (06126) செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய திங்கட்கிழமைகளிலும், அதன் மறுமார்க்கமான சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் (06125) செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய செவ்வாய்க்கிழமைகளிலும் இயக்கப்படும்.
  • போத்தனூர் - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் (06028) மற்றும் சென்னை சென்ட்ரல் - போத்தனூர் (06027) சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 4 முதல் 27-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 12 சேவைகள் இயக்கப்படும்.
  • மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06030) மற்றும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி (06029) சிறப்பு ரயில்கள் தலா 4 சேவைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளன.
  • திருநெல்வேலி - தாம்பரம் (06166) மற்றும் தாம்பரம் - திருநெல்வேலி (06165) சிறப்பு ரயில்களும் செப்டம்பர் மாதத்தில் தலா 4 சேவைகள் இயக்கப்பட உள்ளன.
  • இதனுடன், திருநெல்வேலி - தாம்பரம் (06070) சிறப்பு ரயில் செப்டம்பர் 3, 10, 17, 24 ஆகிய வியாழக்கிழமைகளிலும், தாம்பரம் – திருநெல்வேலி (06069) செப்டம்பர் 4, 11, 18, 25 ஆகிய வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும்.
இதையும் படிங்க: “சுனாமி போல் வந்த கல்லுக்கும் மண்ணுக்கும் நடுவே உயிர்பிழைத்ததே அதிசயம்” - நேபாளத்திலிருந்து சென்னை வந்தவர்கள் பேட்டி

இந்த ரயில்களின் சேவைகள் குறித்து விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள ‘ரயில் ஒன்’ செயலி அல்லது ஐ.ஆர்.சி.டி.சி தளத்தை பயனர்கள் பார்வையிடலாம்.

முன்பதிவு விவரங்கள் வெளியீடு

தற்போது, 06126/06125, 06028/06027, 06030/06029, 06166/06165, 06070/06069 ஆகிய ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. 06059/06060 மற்றும் 06045/06046 ரயில்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு தெற்கு ரயில்வே சார்பில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.