ETV Bharat / state

'அம்மா உணவகங்களில் பாரம்பரிய தானியங்களின் கூழ்' - சிறப்பு கண்காட்சியில் விவசாயிகள் கோரிக்கை

இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கவும், பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீண்டும் கொண்டு வரவும் இத்தகைய கண்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சிறப்பு கண்காட்சியில் வைக்கப்பட்ட காய்கறிகள்
சிறப்பு கண்காட்சியில் வைக்கப்பட்ட காய்கறிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 9:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வேலூர்: அரசு நடத்தும் அம்மா உணவகம் திட்டத்தின் மூலம் பாரம்பரிய தானியங்களை பயன்படுத்தி கம்பு கூழ், கேழ்வரகு கூழ் போன்ற சத்தான உணவுகளை வழங்கினால் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும் என்று விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் மரபு காய்கறிகள், கிழங்குகள் மற்றும் விதைகள் சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நேதாஜி விளையாட்டரங்கு வளாகத்தில் சிறப்பு கண்காட்சி மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

நெல் மற்றும் தானியங்கள்
நெல் மற்றும் தானியங்கள் (ETV Bharat Tamil Nadu)

கண்காட்சியில் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் அரிசி வகைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கருப்பு கவுனி, குடவாழை, மிளகுசம்பா, ரத்தசாளி, கொத்தமல்லி, தூயமல்லி, சிவனார் சம்பா, மாப்பிள்ளை சம்பா, சிவப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. மேலும் முடவாட்டுக்கால் கிழங்கு, மரவள்ளி கிழங்கு போன்ற பல்வேறு கிழங்கு வகைகளும், நூற்றுக்கணக்கான தக்காளி, பூசணிக்காய், கத்தரிக்காய், மிளகாய், வெண்டை, சுரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறி ரகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதே போல வாழை வகைகள், கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள், நவதானியங்கள், கொள்ளு, பச்சைப்பயறு, காராமணி, மொச்சை, இஞ்சி மற்றும் மஞ்சள் ரகங்களும் கண்காட்சியில் முக்கிய இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு, மரபு விதைகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கிச் சென்றனர். பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும், இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்தும் நிபுணர்கள் விளக்கமளித்தனர்.

சுரைக்காய் வகைகள்
சுரைக்காய் வகைகள் (ETV Bharat Tamil Nadu)

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், '' அரசு நடத்தும் அம்மா உணவகம் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு 5 ரூபாய், 10 ரூபாய் போன்ற குறைந்த விலையில் வழங்கப்படுவது பாராட்டத்தக்கது. அதே போல, பாரம்பரிய தானியங்களை பயன்படுத்தி கம்பு கூழ், கேழ்வரகு கூழ் போன்ற சத்தான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்கினால் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். மேலும், இதன் மூலம் பாரம்பரிய விவசாயமும் ஊக்குவிக்கப்படும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இயற்கை அங்காடி அமைப்பாளர் ராமமூர்த்தி கூறுகையில், '' “இன்றைய காலத்தில் மக்கள் ஆரோக்கியம் குறித்து அதிக அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால் உண்மையான இயற்கை மற்றும் பாரம்பரிய பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியவில்லை. இந்தக் கண்காட்சி மூலம் விவசாயிகளையும், நுகர்வோர்களையும் நேரடியாக இணைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடுத்தர வியாபாரிகள் இல்லாமல் நேரடி விற்பனை நடைபெறுவதால் விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கிறது. அதே நேரத்தில் மக்களும் தரமான, ரசாயனமில்லா உணவுப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

கிழங்குகள்
கிழங்குகள் (ETV Bharat Tamil Nadu)

இயற்கை அங்காடி அமைப்பாளர் பிரியதர்ஷினி கூறுகையில், '' பாரம்பரிய அரிசி, சிறுதானியம், கிழங்கு வகைகள் போன்றவை ஒருகாலத்தில் நம் தினசரி உணவில் இருந்தன. இன்று அவை மறைந்து போகும் நிலைக்கு வந்துள்ளன. இத்தகைய கண்காட்சிகள் மூலம் அவற்றை மீண்டும் மக்கள் நினைவில் கொண்டு வர முடிகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து, நிரந்தர இயற்கை அங்காடிகளை அமைத்தால் விவசாயமும், மக்களின் ஆரோக்கியமும் வளர்ச்சி அடையும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பொதுத்தேர்வு; தேர்வுத்துறை முக்கிய அறிவுரை