நான் ஓர் உழத்தி! 120 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த லட்சுமி தேவி!
விவசாயம் குறித்த புரிதலே இல்லாமல் நெல் பயிரிடலை கையில் எடுத்த லட்சுமி தேவி, எப்படி அரை ஏக்கரிலிருந்து 10 ஏக்கருக்கு விவசாயத்தை விரிவடைய செய்துள்ளார் என்பது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு!

Published : October 18, 2025 at 3:59 PM IST
- By இரா. மணிகண்டன்
திருநெல்வேலி: உலகிற்கே உணவளிக்கும் உன்னத தொழில் விவசாயம். இது நமது பாரம்பரிய தொழிலும் கூட. இயற்கையாக நடைபெற்று வந்த விவசாயத்தில், காலப் போக்கில் அதிக சாகுபடிக்காக ரசாயன உரங்கள் மெல்ல மெல்ல நுழைந்தன. இதனால் அதில் உள்ள நஞ்சையும் உணவுடன் சேர்த்து நாம் உண்டு வருகிறோம். இதன் அபாயம் குறித்து புரிந்து கொண்ட பலர், மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வருகின்றனர். தற்போது இயற்கை விவசாயம் மிகப் பெரிய விழிப்புணர்வு இயக்கமாகவும் மாறி வருகிறது.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த 67 வயதான லட்சுமி தேவி, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து தனி ஆளாக சாதித்து வருகிறார். அவருடைய கணவர் சூரியநாராயணன் ஆழ்வார்குறிச்சி அரசு உதவி பெறும் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். லட்சுமி தேவி மத்திய அரசின் தொலைதொடர்பு துறையில் வேலை செய்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக உடல் எடை சுமார் 40 கிலோ குறைந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஒரே வழி, நஞ்சு இல்லாத உணவை சாப்பிட வேண்டும் என முடிவெடுத்த லட்சுமி தேவி, தனக்கான உணவையும் தானே பயிர் முடிவு செய்தார். இயற்கை விவசாயத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட அவர், தான் பார்த்து வந்த வேலையில் இருந்து 2010-ல் விருப்ப ஓய்வு பெற்றார்.
இயற்கை விவசாயம் குறித்து ஒன்றுமே தெரியாவிட்டாலும், புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் கற்றுக் கொண்டு, முதலில் அரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த புரிதல் உண்டான போது, அதன் மீது ஈடுபாடு ஏற்பட்டு, தற்போது அதையே தனது வயலில் பயிரிட்டு வருகிறார். அரை ஏக்கரில் தொடங்கி இப்போது 10 ஏக்கராக விரிந்திருக்கிறது லட்சுமி தேவியின் பாரம்பரிய நெல் விவசாயம்.
இது குறித்து அறிந்தவுடன், பாரம்பரிய நெல் பயிரிடல் குறித்து அறிந்து கொள்வதற்காக ஈடிவி பாரத் தமிழ்நாடு குழு அம்பாசமுத்திரம் பயணப்பட்டது.
120 வகை நெல் ரகங்கள்!
இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது அம்பாசமுத்திரம். அங்கு லட்சுமி தேவியின் வீட்டிற்குள் நுழைந்ததும் திரும்பும் இடமெல்லாம் நெல்மணிகளும், இயற்கை விவசாயத்திற்காக அவர் வாங்கிய விருதுகளும் நம்மை வரவேற்றன.
இந்த வீட்டிற்கு அருகிலேயே மற்றொரு வீட்டில், ‘பொதிகை உழத்தி விதை வங்கி’ என்ற பெயரில் பாரம்பரிய நெல் விதைகளை விற்பனை செய்து வருகிறார் லட்சுமி தேவி. மூட்டை மூட்டையாக விதை நெல்மணிகளுக்கு மத்தியில், 120 வகையான பாரம்பரிய நெல் விதைகளை பொக்கிஷமாக மண் ஜாடிகளில் சேகரித்து வைத்திருக்கிறார்.

அவற்றில் கிட்டத்தட்ட 70% நெல் ரகங்கள் லட்சுமி தேவி தனி ஆளாக போராடி மீட்டெடுத்தவை. குறிப்பாக கொத்தமல்லி சம்பா, கொட்டார சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, அடுக்கு நெல், நீளம் சம்பா, ரத்தசாலி, குள்ள கார், கருத்தக்கார், மைக்குருவை, கருங்குருவை, நெல்லையப்பர், சிவன் சம்பா போன்ற அரிதான பாரம்பரிய நெல் ரகங்கள் லட்சுமி தேவியிடம் இருக்கின்றன.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர், "நாம் சாப்பிடும் வெள்ளை அரிசியின் விளைச்சலுக்கு அதிகபட்சம் 180 நாட்கள் வரை ஆகும். அதே போல் பாரம்பரிய நெல் ரகங்களில் நீலம் சம்பா அதிகபட்சமாக 200 நாட்களும், அடுக்கு நெல் குறைந்தபட்சமாக 70 நாட்களும் விளைய எடுத்துக் கொள்கிறது. அதுவே கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்றவை 160 நாட்களில் விளைச்சல் தருகிறது" என்றார்.
ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட ரகங்கள்!
இது குறித்து அவர் கூறுகையில், “இது மருத பூமி என்பதால் 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். இதற்காக நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். வீட்டிலேயே தேவையான இயற்கை உரங்களை தயார் செய்கிறேன்” என்கிறார்.
இயற்கை உரங்களின் தேவைக்காக வீட்டிற்கு பின்னால் நாட்டு மாடுகளையும் லட்சுமி தேவி வளர்த்து வருகிறார். மாட்டின் சாணம், கோமியம் மூலம் பஞ்சகவ்யம் தயார் செய்து வைத்திருக்கிறார். பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், வேப்பிலை கரைசல், பனம்பழம் கரைசல் இதுதான் லட்சுமி தேவியின் பிரதான இயற்கை உரங்கள்.
இயற்கை விவசாயம் மீது ஆர்வம்!
“ஒரு காலத்தில் நாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாகவும் தற்போது அது 180 ஆக குறைந்திருப்பதாகவும் படித்தேன். அதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இப்போது விதைகளுக்காக மட்டுமே ஒரு வயலில் தனியாக பயிர் வைக்கிறேன். அவற்றை விற்பனையும் செய்து வருகிறேன்.
மிகவும் அரிய ரகங்களான கொட்டார சம்பா, மிளகு சம்பா, கொத்தமல்லி சம்பா போன்றவையும் பயிரிடுகிறேன். என்னை பொறுத்த வரை இயற்கை விவசாயம் தான் சிறந்தது. இதை என் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுக்கிறேன்.
இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது!
சிவப்பரிசியில் அதிக சத்துகள் இருக்கின்றன. அதனாலேயே கொட்டார சம்பா, மிளகு சம்பா, கொத்தமல்லி சம்பா, வெள்ளை பொன்னி, காலாபாத், ரத்தசாலி போன்ற ரகங்களை விளைவிக்கிறேன். ரத்தசாலிக்கு ஹீமோகுளோபினை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது. இந்த நெல்லை நிறைய பேர் வாங்குகின்றனர். எனது வயலில் கையால் அறுவடை செய்யப்பட்டு, கதிர் அடித்து தான் அரிசி எடுக்கப்படுகிறது.
நிறைய வகையான நெல்மணிகளை பயிரிடுவதால் ஒன்றோடு ஒன்று கலந்து விடக் கூடாது என்பதற்காக கையால் அறுவடை செய்கிறோம். இயந்திர அறுவடையால் ஒரே நபர் மட்டுமே பயன் பெறுவார். கையால் அறுவடை செய்யும் போது 15 பேர் வரை வேலை செய்வார்கள். எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் இதை தேர்வு செய்தேன். கையால் அறுவடை செய்யும்போது செலவு அதிகம் என்றாலும் தரமான வைக்கோல் கிடைக்கும்.
இலக்கியங்களில் சொல்லி இருப்பது போல, என்னை ‘உழத்தி’ என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். இது பொதிகை மலை அடிவாரம் என்பதால் ‘பொதிகை உழத்தி’ என்ற பெயரில் விதை வங்கி நடத்தி வருகிறேன்” என்கிறார் பெருமையுடன்.
பாரம்பரிய நெல் விளைச்சலுக்காக, பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் லட்சுமி தேவி. இயற்கையை பாதுகாக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்னும் இவர், பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

