ETV Bharat / state

சந்திர கிரகணம்: கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

பூமி சூரியனின் ஒளியை ஓரளவு மட்டுமே தடுப்பதால், சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் அல்லாமல், சாம்பல் அல்லது தங்க நிறத்தில் தோன்றும் என விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி தெரிவித்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 8:28 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திண்டுக்கல்: கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் சந்திர கிரகணத்தை இலவசமாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய 3-ம் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது தோன்றும் அற்புதமாக நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, முழு சந்திர கிரகணம் மார்ச் 3 நிகழும். இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்பதால், இந்த அரிய நிகழ்வை காண தவறாதீர்கள் என தெரிவித்துள்ளது.

வடகிழக்கு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள சில பகுதிகளை தவிர, இந்தியாவின் பெரும்பாலான இடங்களிலிருந்து கிரகணத்தைக் காணலாம். குறிப்பாக, சென்னை, கன்னியாகுமரி போன்ற இடங்கள். அதுவும் சென்னையில் நாளை நிகழவுள்ள முழு சந்திர கிரகணத்தின் இறுதிப் பகுதியை சுமார் 31 நிமிடங்கள் வரை காண முடியும் எனவும், முழு சந்திர கிரகணம் 58 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி, “பூமியை நிலவு சுற்றி வரும் போது சூரியனிலிருந்து வெளியேறும் கதிர்கள் பூமி மீது பட்ட பிறகு, அதன் நிழல் நிலவின் மீது படும் நிகழ்வே 'சந்திர கிரகணம்' ஆகும்.

விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளை நண்பகல் முதல் தொடங்கும் இந்த சந்திர கிரகணம் மாலை 6.30 மணி முதல் 6.47 வரை தெளிவாகத் தென்படும். பூமி சூரியனின் ஒளியை ஓரளவு மட்டுமே தடுக்கிறது. இதனால் சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் அல்லாமல், சாம்பல் அல்லது தங்க நிறத்தில் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் முழு சந்திர கிரகணம்: தமிழ்நாட்டில் எங்கு, எப்போது பார்க்கலாம்?

இதனை வானம் தெளிவாகத் தென்பட்டால் தொலைநோக்கி மூலமாகவும், வெறும் கண்களில் கூட பார்க்கலாம். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், நாளை வரும் கிரகணத்தை தொடர்ந்து, அடுத்த சந்திர கிரகண நிகழ்வானது 2028 டிசம்பர் மாதத்தில் தான் தோன்றும்” என்று தெரிவித்தார்

இதனால், இந்த நிகழ்வை கொடைக்கானல் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வகத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைவரும் சந்திர கிரகணத்தை இலவசமாக காண அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.