ETV Bharat / state

விஜய் இப்போது வீர வசனம் பேசுவாரா? சபாநாயகர் அப்பாவு கேள்வி

ஜனநாயகன் பட விவகாரத்தில் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொதி நிலையை உருவாக்குவதற்காக பாஜகவும் விஜய்யும் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 4:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: நான் சென்னையில் தான் இருக்கிறேன், முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என தற்போது விஜய் வீர வசனம் பேசுவாரா?என சிபிஐ சம்மன் குறித்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு இன்று நெல்லை வண்ணாரப்பேட்டையில செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய்க்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்தும், திரைப்பட வெளியீட்டு சிக்கல்கள் குறித்தும் பதில் அளித்த அவர், “41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே நடிகர் விஜய் "நான் சென்னையில் தான் இருக்கிறேன், முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்" என வீர வசனம் பேசினார்.

தற்போது சிபிஐ 12 ஆம் தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வசனத்தை இப்போது பயன்படுத்துவாரா? அல்லது பாஜகவுடன் இணைந்து நாடகம் ஆடுகிறாரா? என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணையைக் கேட்டாலே நியாயம் கிடைத்து விடும் என்று நினைப்பது தவறு. ஆந்திராவில் ஒரு ரசிகர் இறந்ததற்கு ஒரு நடிகரே கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி இருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்திருக்கும்” என்றார்.

ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து கேட்ட போது, ”மத்திய அரசு தான் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) வழங்குகிறது.

இதையும் படிங்க: தணிக்கை வாரியம் மூலம் நெருக்கடி - விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த மாணிக்கம் தாகூர் எம்பி

அப்படி இருக்கையில், படம் வெளியாவதில் சிக்கல் இருப்பது போலவும், அதனைத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொதி நிலையை உருவாக்குவதற்காகவும் பாஜகவும் விஜய்யும் இணைந்து செயல்படுவதாகத் தெரிகிறது” என்றார்.

மேலும் பேசிய சபாநாயகர் அப்பாவு, “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், பிரதமருக்கும் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி பல முறை கூறியும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அது போன்று காங்கிரஸ் கட்சியில் பலர் கூட்டணி குறித்து பேசினாலும் தலைமை நல்ல முடிவு எடுப்பார்கள்” என தெரிவித்தார்.