தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலயா? அப்போ இந்த அப்டேட் உங்களுக்கு தான்!
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோர்களுக்காக, சென்னையில் இருந்து மதுரை மற்றும் செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.

Published : October 16, 2025 at 7:58 PM IST
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரத்திலிருந்து மதுரை வரை மெமு ரயில் உள்பட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு முன்பதிவு ரயில்களுடன் முன்பதிவு இல்லாத ரயில்களையும், மெமு ரயில்களையும் அவ்வப்போது இயக்கி வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதியை கருதி தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை வரை செல்லும் வகையில் சிறப்பு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை மெமு ரயில், மதுரையிலிருந்து தாம்பரம் வரை பகல் நேர மெமு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில்
அக்டோபர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் - 06013) மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 8.45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்படும் செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் - 06014), மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதில், ஒரு குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட பெட்டி, இருக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இரு மார்க்கத்திலும் மேற்கண்ட ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
சென்னை எழும்பூர் - மதுரை மெமு எக்ஸ்பிரஸ் ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் சிறப்பு ஒரு வழி மெமு ரயில் (வண்டி எண்- 06161) சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். இதில், இருக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு, சோழவந்தான் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மதுரை - தாம்பரம் மெமு ரயில்
மதுரையில் இருந்து அக்டோபர் 18 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் புறப்படும் மதுரை - தாம்பரம் மெமு ரயில் (வண்டி எண் - 06162) அன்று இரவு 7.15-க்கு தாம்பரம் சென்றடையும். 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள இந்த ரயில் சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

