ரயில் தண்டவாளங்களுக்கு அருகே பட்டம் விட்டால் சிறை - தெற்கு ரயில்வே எச்சரிக்கை
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ரயில்வே உயர் அழுத்த மின்சாரப் பாதைகளால் ஏற்படும் பேராபத்துகளை குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published : March 2, 2026 at 10:47 PM IST
சென்னை: 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் கம்பிகளில் பட்டம் விடும் நூல் சிக்கினால், அது ஒரு மின் கடத்தியாக மாறி பட்டம் விடுபவர் மீது கடுமையான மின்சாரம் பாய்ந்து உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது 1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னைக் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' பொதுமக்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள். ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் மற்றும் உயர் அழுத்த மின்சாரப் பாதைகளுக்கு (OHE) அருகில் பட்டம் விடுவதைத் தவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ரயில்வே மின்சாரப் பாதைகளில் 25,000 வோல்ட் (25,000 Volts) உயர் அழுத்த மின்சாரம் பாய்கிறது. ரயில்வே உயர் அழுத்த மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது என்பது விளையாட்டல்ல, அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் ஒரு விபரீதச் செயலாகும். 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் கம்பிகளில் பட்டம் விடும் நூல் சிக்கினால், அது ஒரு மின் கடத்தியாக மாறி பட்டம் விடுபவர் மீது கடுமையான மின்சாரம் பாய்ந்து உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய செயல்களால் மின்சாரக் கம்பிகளில் ஏற்படும் பாதிப்புகள் ரயில் போக்குவரத்தை முற்றிலும் முடக்குவதுடன், கோடிக்கணக்கான மதிப்பிலான ரயில்வே உட்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தும். இத்தகைய ஒரு சிறு கவனக்குறைவுகூட பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், தண்டவாளப் பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலும் தவிர்க்குமாறு சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கிறது.
சட்ட ரீதியான நடவடிக்கைகள்:
ரயில்வே எல்லைக்குள் பட்டம் விடுவது 1989-ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின்படி கீழ்கண்ட சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்:
பிரிவு 147: ரயில்வே எல்லைக்குள் அத்துமீறி நுழைதல்.
பிரிவு 150: ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அபாயம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல்.
பிரிவு 151: ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 வரை அபராதம் அல்லது இரண்டும், 1989-ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் கீழ் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ரயில்வே உயர் அழுத்த மின்சாரப் பாதைகளால் ஏற்படும் பேராபத்துகளை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக, ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு அருகில் விளையாடுவதோ அல்லது பட்டம் விடுவதோ உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தி, அத்தகைய ஆபத்தான செயல்களில் அவர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஒவ்வொருவரின் சமூகக் கடமையாகும். ஒரு நொடிப் பொழுது கவனக்குறைவு வாழ்நாள் முழுமைக்கும் ஈடு செய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உயிர்களைக் காக்கவும் விபத்துகளை அறவே தவிர்க்கவும் ரயில்வே நிர்வாகத்துடன் அனைவரும் கரம் கோர்ப்போம். விழிப்புணர்வுடன் செயல்பட்டு விபத்தில்லா ரயில்வேயை உருவாக்குவோம்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: 'நாங்க இருக்கோம் மகளே...' பெற்றோரை இழந்த பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முதியோர் இல்லத்தினர் |

