ETV Bharat / state

பேரவை நிகழ்வுகளை 15 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பத் திட்டம் - அவைக்குறிப்பில் இல்லாத கருத்துக்கள் ரீல்ஸாக பரவுவதால் நடவடிக்கை

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள், நேரலையில் ஒளிபரப்பான பின்னர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களாக பரவுவதால், பேரவையின் மாண்பு பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் முறையிட்டார்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 12:23 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுக்கள், சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க சட்டப்பேரவை நேரலை 15 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள், உறுப்பினர்களின் பேச்சுகள், தொகுதி சார்ந்த பிரச்சினைகள், மற்றும் முக்கிய விவகாரங்களில் அரசு அளிக்கும் விளக்கங்கள் குறித்து பொதுமக்களிடையே ஆர்வமும், விவாதமும் அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், சட்டப்பேரவையில் பேசப்படும் சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகள் நேரலை ஒளிபரப்பில் இடம்பெற்று பின்னர், சமூக வலைதளங்களில் பரவி வருவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தவெக அமைச்சர்கள் இடையே நடைபெற்ற காரசார விவாதங்கள், முன்வைத்த சில குற்றச்சாட்டுகள் தொடர்பான பேச்சுகளில் சில வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

சட்டப்பேரவை மாண்பு

ஆனாலும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள், நேரலையில் ஒளிபரப்பான பின்னர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களாக பரவுவதால், பேரவையின் மாண்பு பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் முறையிட்டிருந்தார்.

மேலும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு, அவை உரிமை மீறல் தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார்களை உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது பேசுகையில், ”பேரவை விதிகளின்படி, அவையின் மாண்பை பாதிக்கும் வகையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதாக சபாநாயகர் கருதினால், அதனை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பலாம் அல்லது பேரவை நேரடியாக ஆய்வு செய்யலாம்.

அதேபோல், சபாநாயகர் பேரவையில் இருந்து ஒரு கருத்தை நீக்கினாலும், அந்தப் பகுதி பத்திரிகைகளில் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பேரவையின் மாண்பு பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு அவை உரிமை மீறல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், ”சபாநாயகர் கூறுவதையே மதிக்காத நிலை இருந்தால், வேறு யாராவது கூறினால் மதிப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க டெக்னாலஜி

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ”எ.வ. வேலு கூறிய விவகாரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பகுதிகள் வெளியில் வராமல், நேரலை ஒளிபரப்பை மேற்கொள்ளும் நடைமுறை குறித்து மற்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நீக்கப்பட்ட பகுதிகள் வெளியே வராமல் நேரலை ஒளிபரப்பப்படுவதற்கான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதேபோன்ற முறையை தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் பின்பற்றுவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

15 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு?

இதனிடையே, சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பும் வகையில், தொழில்நுட்ப ரீதியாக ஏற்பாடு செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், பேரவையில் பேசப்பட்டு பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகள், அல்லது பகுதிகளை நேரலை ஒளிபரப்புக் குழுவே அடையாளம் கண்டு ஒளிபரப்பில் இருந்து நீக்குவதற்கு வசதி ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை வாய்ந்தது - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உறுதி

இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், தற்போது நேரலையில் ஒளிபரப்பாகி, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் பரவி வருவதை தடுக்க முடியும் என பேரவை வட்டாரம் கருதுகிறது.
எனினும், 15 நிமிட தாமத ஒளிபரப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தற்போது இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.