ETV Bharat / state

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் குடும்பத்திற்கு அரசு வேலை என தகவல்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கரூருக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆகையால் இது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் - கோப்புப்படம்
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 2, 2026 at 9:09 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 , 11 ஆகிய தேதிகளில் கரூர் செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கு நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். மேலும், கடந்த ஆண்டு செப்டம்பரில கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு தகுதிகளின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கான ஆவணத்தையும் அவர் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கரூருக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆகையால் இது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து தவெக தலைவர் என்பதன் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஆனால், கரூருக்கு நேரில் செல்லாமல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை எழுப்பியது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அடுத்து, அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஸ்பா-வை தொடர்ந்து நடத்தணுமா ரூ. 50 ஆயிரம் கொடு' -மிரட்டிய இரண்டு பெண் காவலர்கள் கைது