ETV Bharat / state

தமிழகத்திற்கு ஒரே நாளில் பிரதர் மோடி, ராகுல் காந்தி வருகை?

ஜனவரி 28ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 9:55 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகள், கூட்டணி பேச்சு வார்த்தை என விறுவிறுப்பாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இன்று அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது. கூட்டணியில் இணைந்துள்ள பாமகவிற்கு, தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக - அதிமுக உடனான கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், வரும் ஜனவரி 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வரும் பிரதமர் கன்னியாகுமரியில் பாஜக சார்பில் நடைபெறும் தாமரை மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த நிகழ்வில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் தமிழகம் வருவதற்கு முன்பாகவே, பாஜக - அதிமுக உடன், மற்ற எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இணையும் என்பது முடிவு செய்யப்பட்டுவிடும் அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜனவரி 28ஆம் தேதி பிரதமர் தமிழகம் வருவதாக கூறப்படும் அதே நாளில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி இறுதியில் திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 28 அல்லது 29ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வர வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தமிழ்நாடு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை திருச்சியிலோ அல்லது சென்னையிலோ சந்திக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு திட்டமிட்ட தேதியில் இருபெரும் தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டுக்கு வரும் பட்சத்தில், தமிழ்நாடு தேர்தல் களத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ மீது குறியா? ரசிகர்களை அந்தரத்தில் ஏற்றிய போலீஸ்; தனியார் இடத்தில் இருந்த கட்அவுட் அகற்றம்