சொத்து தகராறில் தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்... கோவையில் பயங்கரம்!
ஏற்கெனவே எழுதி கொடுத்த வீட்டை திரும்பி கேட்டதால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Published : March 2, 2026 at 6:27 PM IST
கோயம்புத்தூர்: சொத்து பிரச்சனை காரணமாக தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 61 வயது முதியவர் விஸ்வநாதன். இவருக்கு ராஜசேகர் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த சூழலில், விஸ்வநாதன் கடந்த 2017 ஆம் ஆண்டு அன்னூர் பகுதியில் உள்ள தனது வீட்டை மகன் ராஜசேகருக்கு எழுதி கொடுத்துள்ளார். அதன் பிறகு ராஜசேகர் தந்தை விஸ்வநாதனை சரிவர கவனித்துக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த விஸ்வநாதன் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரை அணுகி அந்த வீட்டை மீண்டும் தனது பேருக்கு மாற்ற மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் விஸ்வநாதன் வழக்கு தொடுத்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே எழுதி கொடுத்த வீட்டை திரும்பி கேட்பதால் விஸ்வநாதன் மீது ராஜசேகருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 1) ராஜசேகர் ஒன்னக்கரசம்பாளையம் வந்து தந்தை விஸ்வநாதனிடம் சாலையில் வைத்து தகராறு செய்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜசேகர் தந்தையை கீழே தள்ளி விட்டு அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில், நிலைகுலைந்த முதியவர் உடல் அசைவின்றி அப்படியே கிடக்க, அந்த கல்லை மீண்டும் எடுத்து தந்தையின் தலையில் ராஜசேகர் போட்டுள்ளார். இதனால் தலை சிதைந்த நிலையில், விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையை கொலை செய்ததும் ராஜசேகர் அங்கிருந்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவரை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலுக்காக கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ராஜசேகர் தனது தந்தையை கீழே தள்ளி தலையில் கல்லை போடும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

