ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சென்னை வருகை

கடந்த பிப்ரவரி மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி, தமிழ்நாடு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சென்னை வருகை
ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சென்னை வருகை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 3, 2026 at 3:11 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை வைக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி விசைப்படகு ஒன்றில் மண்டபம் பகுதியில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடலோர காவல் ரோந்து கப்பல் ஒன்று வந்து ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்தது.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசைப்படகு, மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு மீனவர்கள் ஆறு பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினர், சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதன் பலனாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் விடுவித்து, அவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர், இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களை தங்களுடைய பொறுப்பில் வைத்துக் கொண்டு, அவர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களுக்கான பாஸ்போர்ட் இல்லாததால், இந்திய தூதரகம் மீனவர்கள் ஆறு பேருக்கும் எமர்ஜென்சி சான்றிதழ்களை வழங்கியது. அதோடு மட்டுமில்லாமல், இந்திய தூதரக அதிகாரிகள் 6 மீனவர்களுக்கும், விமான டிக்கெட்டுகளையும் ஏற்பாடு செய்தனர்.

இதையும் படிங்க: சென்னை வந்த பீகார் மாநில தொழிலாளர்கள் 5 பேர் கடத்தல் - ஆட்டோ ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது

அதன் மூலம் இலங்கையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், நேற்று 6 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்த 6 மீனவர்களையும், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சொந்த ஊர்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.