ETV Bharat / state

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க சிவகங்கை மாவட்ட போக்சோ விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 12:11 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சிவகங்கை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜோதிடருக்கு 200 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (52) என்பவர் ஜோதிடம் பார்ப்பதும், தோஷங்கள் கழிக்கும் பரிகார பூஜைகள் நடத்துவதையும் தொழிலாக செய்து வந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தனது 18 மற்றும் 14 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுடன் அவர்களின் தாயார் ஜோதிடம் பார்க்க ராமகிருஷ்ணனை அணுகியுள்ளார்.

பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இல்லை என்பதால் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? என்று அவர்களது தாய் கேட்டதையடுத்து, உடனே பரிகார பூஜைக்காக இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு ஜோதிடர் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண், தனது இரு பெண் பிள்ளைகளையும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜோதிடர்
சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜோதிடர் (ETV Bharat Tamil Nadu)

அங்கு அந்த பெண்மணியை தனி அறையில் இருக்கச் சொல்லி விட்டு, இரண்டு சிறுமிகளையும் வேறு அறைக்கு அழைத்துச் சென்ற ஜோதிடர், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த விஷயத்தை வெளியே கூறினால் பெற்றோருக்கு ஆபத்து ஏற்படும் என ஜோதிடர் மிரட்டியதால் பயந்த சிறுமிகள் சம்பவத்தை நீண்ட காலம் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து, சிறுமிகளுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு பால்வினை நோய் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து இரண்டு சிறுமிகளையும் ஜோதிடர் ராமகிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜோதிடர் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: அஜித்குமார் கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை மாவட்ட போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி கோகுல் முருகன் அளித்த தீர்ப்பில், "குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு மொத்தம் 200 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்தார்.

"பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்" எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.