சோழிங்கநல்லூரில் தவெக வேட்பாளர் 96,780 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026: சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் அரவிந்த் ரமேஷ், அதிமுகவின் கந்தன், நாதக-வின் ஜெயலட்சுமி, தவெக-வில் இருந்து ஈசிஆர் பி.சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

Published : May 4, 2026 at 1:40 AM IST
|Updated : May 4, 2026 at 2:34 PM IST
சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு): தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தவெக வேட்பாளர் சரவணன் 96,780 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷை வென்றுள்ளார்.
கடந்த 2019-ல் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்த செங்கல்பட்டு மாவட்டம் 'குட்டி சென்னை' என்றும் அழைக்கப்படுகிறது. இதில் செங்கல்பட்டு, மதுராந்தகம் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் சோழிங்கநல்லூர் என 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.
அதில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி என்ற பெருமையைக் கொண்டுள்ளது. அந்த வகையில், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு ஆண் வாக்காளர்கள் 2,70,668 பேரும், பெண் வாக்காளர்கள் 2,83,121 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 116 பேரும் என மொத்தமாக 5,53,905 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 85.40% வாக்குகள் பதிவான நிலையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 80.39% வாக்குகள் பதிவானது.
அதில் முக்கிய வேட்பாளர்களாக திமுகவை சேர்ந்த தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மீண்டும் களம் காண்கிறார். அவரை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த கந்தன், தவெகவை சேர்ந்த சரவண மூர்த்தி, நாதகவை சேர்ந்த ஜெயலட்சுமி என மொத்தமாக 27 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், 33 சுற்றுகளின் முடிவில் தவெக வேட்பாளர் 96,780 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
அந்த வகையில், தவெக வேட்பாளர் ஈசிஆர் பி.சரவணன் 2,20,382 வாக்குகளும், திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் 1,23,602 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கந்தன் 74,112 வாக்குகளும், நாதக வேட்பாளர் ஜெயலட்சுமி 21,919 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
| இதையும் படிங்க: சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் - 2026 லைவ் அப்டேட்ஸ் |
2021 தேர்தலை பொறுத்தவரை, திமுக சார்பில் போட்டியிட்ட அரவிந்த் ரமேஷ் 1,71,558 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கந்தனை (1,36,153) 35,405 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அதேசமயம் நாதக மைக்கேல் 38,872-ம், மநீம இராஜீவ்குமார் 30,284-ம், தேமுக ஆர்.முருகன் 3,912 வாக்குகளும் வாங்கியிருந்த நிலையில், நோட்டாவுக்கு மட்டுமே 3,030 வாக்குகள் பதிவாகியிருந்தது.
சோழிங்கநல்லூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளதாலும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகி வருவதாலும் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சனையாக உள்ளது. எனவே, ஆமை வேகத்தில் நடக்கும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கை.
அதேபோல, செம்மஞ்சேரி, நாவலூர் மற்றும் துரைப்பாக்கம் போன்ற பல இடங்களில் இன்னும் குடிநீர் இணைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை. பாதாளச் சாக்கடை வசதியும் முழுமையாக இல்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டும் சுவாசப் பிரச்சினைகளை சந்திப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
| சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி - ஒரு பார்வை | ||
| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
| 2026 | ஈசிஆர் பி.சரவணன் | தவெக |
| 2021 | அரவிந்த் ரமேஷ் | திமுக |
| 2016 | அரவிந்த் ரமேஷ் | திமுக |
| 2011 | K.P. கந்தன் | அதிமுக |

