நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்; ஒரு போஸ்டர் தான் பிரச்சினைக்கு காரணமா? அதிர்ச்சி பின்னணி
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேரில் 2 பேர் முன்னதாகவே கணேசன் டீக்கடைக்கு சென்று டீ குடித்தபடி நோட்டம் விட்டதாகவும், அவர்கள் அளித்த தகவலின்பேரில்தான் மீதமுள்ள 7 பேரும் அந்த டீக்கடைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Published : March 4, 2026 at 8:26 AM IST
திருநெல்வேலி: நாங்குநேரியில் நடந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு ஒரு போஸ்டரால் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என தெரிய வந்துள்ளது.
நாங்குநேரியில் பல ஆண்டுகளாகவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய இந்த மூன்று சமூகத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், சில சமயங்களில் அது கொலையில் முடிவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தான், தமிழகத்தையே உலுக்கிய இரட்டை கொலை சம்பவம் நாங்குநேரியில் நேற்று முன்தினம் அரங்கேறியது. 9 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிள்களில் சென்று, எதிரே வந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, இந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டரே காரணம் எனக் கூறப்படுகிறது. நாங்குநேரி அருகே புளியங்குளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மணல்மேடு சங்கரின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் சமீபத்தில் அப்பகுதி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
நாங்குநேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சமூகத்தினர் பரவலாக வசிக்கின்றனர். அவர்களில் சிலர் இந்த போஸ்டரை பார்த்து அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், கண்ணன் (21), உச்சி மகாளி என்ற மிட்டாய் (20), வசந்த குமார் (21), அந்தோணி மைக்கேல் (18), சுபாஷ் என்ற சுப்பையா (19), கல்யாணி (19), ராஜா (19) ஆகிய 7 பேர் உட்பட 9 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் (மார்ச் 2) இரவு 7:30 மணியளவில் அரிவாள்களுடன் இரு சக்கர வாகனத்தில் பெரும்பத்து கிராமத்தை நோக்கி வந்துள்ளனர். முன்னதாக, அவர்கள் கடம்போடு வாழ்வு கிராமத்தில் பைக்கில் சென்ற ஒருவரை தாக்கி அந்த பைக்கை பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், பெரும்பத்து கிராமத்தில் கணேசன் என்பவர் நடத்தி வரும் டீக்கடைக்கு சென்ற அந்த கும்பல், அரிவாளை எடுத்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்ட தொடங்கியுள்ளது.
அதில் இந்திரா காலனியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ஜான் என்பவரின் தலையில் வெட்டு விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டிரானத் கட்டா என்பவரையும் வெட்டியதில் அவரும் உயிரிழந்தார்.
இது தவிர ராமசாமி, பிரபாகரன், ஆறுமுகம், கணேசன் உட்பட 7 பேரை தலை மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் நெல்சன் தற்போது கவலைக்கிடமாக உள்ளார். இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மூன்று வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், இது சாதியரீதியிலான தாக்குதலா? என்பதை உறுதிப்படுத்துவதில் போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், மணல்மேடு சங்கர் போஸ்டர் பிரச்சினையை மையமாக வைத்தே, இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.
| இதையும் படிங்க: தொடரும் இழுபறி... முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னரும் முடிவாகாத திமுக - காங்கிரஸ் கூட்டணி |
குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்தே தாக்குதல்
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை குறி வைத்தே அந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேரில் 2 பேர் முன்னதாகவே கணேசன் டீக்கடைக்குச் சென்று டீ குடித்தபடி நோட்டம் விட்டதாகவும், அவர்கள் அளித்த தகவலின் பேரில் தான் மீதமுள்ள 7 பேரும் அந்த டீக்கடைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், திட்டமிட்டே இந்த தாக்குதலை அவர்கள் அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் போலீசாரிடம் நேற்று (மார்ச் 3) சரணடைந்தனர். கைதான 7 பேரில் சுபாஷ், கல்யாணி ஆகிய 2 பேரும் ஏற்கனவே நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரையை வீடு புகுந்து கொடூரமாக வெட்டிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அப்போது அந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் சின்னத்துரையை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் மீண்டும் ஒரு கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

