ETV Bharat / state

காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் முறைகேடு; சொந்தக் கட்சி மீதே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஜோதிமணி எம்.பி.

காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வுச் செயல்முறையை மிக அருகில் இருந்து கவனித்தபோது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று ஜோதிமணி எம்பி கூறியுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2026 at 1:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அக்கட்சியின் எம்பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்கீழ் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளை திமுக ஒதுக்கிய நிலையில், அக்கட்சி ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இது அக்கட்சியில் உள்ள பலருக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுதோல்விக்கான காரணம் குறித்து, தமிழக மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது தொகுதி தேர்வு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர், 'சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை தேர்வு செய்தது மற்றும் அவற்றுக்கான வேட்பாளர்களை தேர்வுகளை தேர்வு செய்ததில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது.

பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்துவரும் மூத்த தொண்டர்கள், தேர்தலில் வெற்றிபெற உண்மையான வாய்ப்பு கொண்டவர்களை ஓரம் தள்ளிவிட்டு, புது முகங்களுக்கும், வெற்றி பெற வாய்ப்பே இல்லாதவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்களில் பலர் இப்போது கட்சியை விட்டு விலகி, செயலற்றவர்களாக ஆகிவிட்டனர்.

இத்தகைய நபர்களுக்கு யார் வாய்ப்பளித்தது? எதன் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? இந்த தவறுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதுமாதிரியான எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல், 'கட்சி விரோதச் செயல்பாடுகளை' மட்டும் விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த பயனும் இல்லை. தவறு இழைத்தவர்கள் இதனால் பாதுகாக்கப்படுவார்கள்.

தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுப் பணிகளை மேற்கொண்ட குழுவிற்கு, தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி, இந்தக் குழு மீது எழும் குற்றச்சாட்டுகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் மட்டுமே விசாரிக்க முடியும். அத்தகைய விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு இல்லை.

காங்கிரஸ் கட்சி தன்னை உண்மையாகவே சீர்படுத்திக்கொள்ள விரும்பினால், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொடர்பான செயல்முறைகள் குறித்து, உரிய விசாரணை நடத்திட வேண்டும். முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே தொண்டர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்,' என்று ஜோதிமணி கூறினார்.

மேலும், 'தமிழகத்தில் மட்டுமல்ல; பிற மாநிலங்களிலும் தேர்தலின்போது தொகுதிகள் தேர்வு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சில நேரங்களில் இவையே தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணமாகவும் மாறிவிடுகின்றது. இதுமாதிரியான சூழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதற்கு பதிலாக பெரும்பாலும் பாதுகாக்கப்படுகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுச் செயல்முறையை மிக அருகில் இருந்து கவனித்தபோது, ​​அது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இத்தகைய வெளிப்படையான மற்றும் அப்பட்டமான முறைகேடுகள், கட்சியின் எதிர்காலத்திற்குப் பெரும் பின்னடைவாக மட்டுமே அமையும்.

பாஜக-விடம் இருந்தும், நரேந்திர மோடியிடம் இருந்தும் நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தில் ராகுல் காந்தி எந்தவித சமரசமும் இன்றி மக்களுக்காக போராடி வருகிறார். ஆனால், கட்சிக்குள் ஏற்படும் இதுமாதிரியான முறைகேடுகள், தொண்டர்களின் நம்பிக்கையை சிதைத்து விடுகின்றது.

இதையும் படிங்க: காங்கிரஸ் எப்போதும் பிறர் உழைப்பின் மீது ஏறி நிற்கும் கட்சி; தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம்

நாம் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக நின்று, அரசியல் ரீதியாக வெற்றிபெற வேண்டுமெனில், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் குரல்களுக்கும்கூட உரிய மரியாதை அளிக்க வேண்டும். அத்துடன் நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் கட்சி செயல்பட வேண்டும். இந்த அதிரடி தேர்தல் சீர்திருத்தங்கள், தமிழ்நாட்டிலிருந்து தொடங்கட்டும்' என்றும் ஜோதிமணி எம்.பி. பதிவிட்டுள்ளார்.