உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் தவெகவிற்கு வருகிறார் - செங்கோட்டையன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் எனது ரத்தத்தை சிந்தி வெற்றியை உறுதியாக பெற்று தருவேன் என்று தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறினார்.

Published : March 1, 2026 at 4:40 PM IST
ஈரோடு: உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் தவெக-விற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் தவெக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தவெக மாநில நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான செங்கோட்டையன் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், ''நாளை மட்டுமல்ல, இனி விஜய் இருக்கும் வரை அவர் தான் தமிழ்நாட்டை ஆள போகிறார். 1987ம் ஆண்டு இதே மண்டபத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் ஜெயலலிதாவை குறித்து பேசினேன். நான் தவெக-வில் இணைந்து 5 மாதங்கள் ஆகிறது. முதல் முறையாக 1977ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நின்றேன்; 26 வயதில் சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். தொடர்ந்து ஒன்பது முறை எம்எல்ஏ-வாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பயணித்தேன். தற்போது விஜய் என மூன்று தலைமுறையுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
எந்த பாதையில் சென்றால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைத்தேன். அதன்படி இந்த இயக்கத்தில் சேர்ந்தேன். அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட என்னை தாங்கி பிடித்தவர் விஜய். 50 ஆண்டுகள் வரலாற்றுக்கு பிறகு ஒரே நொடி பொழுதில் அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். ஆனால் இன்று என் பின்னால் தமிழக வெற்றிக் கழகம் நின்று கொண்டிருக்கிறது. இதனால் எனக்கு 20 வயது குறைந்திருக்கிறது.
விஜய் எனக்கு அவரது இதயத்தில் இடம் கொடுத்து இருக்கிறார். அவர் எல்லோரையும் நேசிக்கிறார். எல்லோரிடத்திலும் அன்பு காட்டுகிறார். சாதி, சமய, பேதமற்ற மாநிலத்தை உருவாக்க விஜய் துடிக்கிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு திமுகவை வீழ்த்தும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் எனது ரத்தத்தை சிந்தி வெற்றியை உறுதியாக பெற்று தருவேன். தேர்தலுக்கு இன்னும் 60 நாட்களே உள்ளன. நமது பணிகள் எதிர்கால தமிழகத்தை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும்.'' என பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், '' இந்த கூட்டம் ராணுவ கட்டுப்பாட்டுடன் நடைபெற்றுள்ளது. ஈரோட்டின் 8 தொகுதிகளையும் தவெக தலைவர் தான் ஆளப்போகிறார். உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் தவெக-விற்கு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் பெயரை சொன்னால் நன்றாக இருக்காது.'' என்றார்.
தவெக தலைவர் விஜய் எழுதி வைத்து பேசுவது விமர்சிக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு, '' எந்த தலைவர் அப்படி செய்யவில்லை? திமுக தலைவரோ, பிரதமரோ பேப்பர் இல்லாமல் பேசுகிறார்களா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து செங்கோட்டையயன், ''அதிகாரம் மற்றும் பண பலம் உள்ள திமுகவை வீழ்த்த தவெகவால் முடியும். எங்கள் கட்சியில் உள்ள சிங்கக்குட்டிகள் சீறிப்பாயும். தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்'' என கூறினார்.

