ETV Bharat / state

'பீகார் வேறு தமிழ்நாடு வேறு.. இங்கே பாஜகவின் பாச்சா பலிக்காது' - செல்வப்பெருந்தகை!

மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து பீகார் தேர்தல் முடிவுகளை களவாடி விட்டதாக பாஜக மீது செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 14, 2025 at 3:38 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு வேறு, பீகார் வேறு.. தமிழ்நாட்டில் பாஜகவின் பாச்சா பலிக்காது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பீகாரில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக தொண்டர்கள் அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தலைவர் நேரு. ஐந்தாண்டு திட்டங்களை கொண்டு வந்தவர். இத்தகைய மாபெரும் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி புகழஞ்சலி செலுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து ராகுல் காந்தி தலைமைக்கு பிறகு தொடர் தோல்வி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பீகார் தேர்தல் முடிவுகளால் காங்கிரஸுக்கு எப்போதும் பின்னடைவு கிடையாது. காங்கிரஸ் இயக்கம் ஆரம்பித்தது முதலே அதிகாரத்தை சுவைக்க வேண்டும், ஆட்சி அதிகாரம் வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது கிடையாது. காங்கிரஸ் என்பது மக்களுக்கான இயக்கம். வெற்றி தோல்வி குறித்து கவலையில்லை. வெற்றி பெற்றால் துள்ளிக் குதிப்பதும், தோல்வியடைந்தால் கவலை அடைவதும் எங்களுக்கு தெரியாது.

செல்வப்பெருந்தகை பேட்டி (ETV Bharat Tamil Nadu)

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து பிராசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ரூ.10 ஆயிரத்திற்கு வாக்குகளை களவாடிவிட்டதாக தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு நாங்களும் உடன்படுகிறோம். ஏனென்றால், தேர்தலுக்கு முன்பாக மக்களின் வரிப் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கும் விதமாக ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது. அதற்கு தேர்தல் முடிவுகளை பாஜகவினர் திருடிவிட்டார்கள் என்பதுதான் பொருள்.

இதையும் படிங்க: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவு: பிரதமர், நிதிஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

அப்படியானால் ஜனநாயகம் வீழ்ந்து போகிறதா? நம் நாட்டிற்கு ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்ற மிகப்பெரிய சவால்கள் காத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு பாஜக தேர்தல் முடிவுகளை களவாட போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு வேறு பீகார் வேறு. தமிழ்நாட்டு மக்கள் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் பாச்சா பலிக்காது. மதவாதத்தை, பாசிசத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.