பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கருத்து கூறக் கூடாது - செல்வப்பெருந்தகை
மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்பட எந்தவிதத்திலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது என செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.

Published : January 9, 2026 at 8:06 PM IST
சென்னை: காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது என்றும், பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. கட்சிகள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என வேகம் காட்டி வருகின்றன. இந்நிலையில் வலுவான கூட்டணி என்று கருதப்படும் திமுக - காங்கிரஸ் இடையே சமீப காலமாக சிறு சலசலப்பு ஏற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டன.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸில் உட்கட்சி பூசல் நிலவுவதை வெளிப்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது என்றும், இது குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கருத்து கூறக் கூடாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பாஜகவை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்கிறார்கள்.

ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறையினால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறுகிற அளவிற்கு அவர்களது நடவடிக்கை அமைந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் கொள்கை சார்ந்த மதவாத, வகுப்புவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்றாமல் தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
| இதையும் படிங்க: வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை - திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து |
2014 ஒரு தேர்தலை தவிர, கடந்த 2004 முதல் 2024 வரை அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ், திமுக அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிட்டிருக்கின்றன. இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறுமேயானால், அதனால் பலனடையப் போவது அதிமுக - பாஜக கூட்டணி தான். அதிமுகவை பயன்படுத்தி வகுப்புவாத பாஜக, தமிழ்நாட்டில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே, மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்பட எந்தவிதத்திலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது. காங்கிரஸ் அமைத்த ஐவர் குழுவினர் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இது குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
இந்திய அளவில் ராகுல் காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு நலனில் அக்கறையோடு, தேசிய நலனையும் பாதுகாக்க வேண்டிய கடமை காங்கிரஸுக்கு இருப்பதை உறுப்பினர்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

