எங்களுக்கு எது தேவையோ, அதனை கூட்டணி கட்சியிடம் கேட்டு பெறுவோம் - செல்வப்பெருந்தகை
அதிகார பகிர்வு குறித்து ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் இணைந்து முடிவு எடுப்பார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Published : January 6, 2026 at 8:14 PM IST
சென்னை: தங்களுக்கு தேவையானதை கூட்டணி கட்சியான திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
அதிகார பகிர்வு குறித்து ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் இணைந்து முடிவு எடுப்பார்கள் என மாணிக்கம் தாகூர் பதிவு தொடர்பான கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.
திமுக-வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை
தொடர்ந்து பேசிய அவர், “மாணிக்கம் தாகூர் எங்களின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர். அவர் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். என்னை பொறுத்த வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த கட்சியிடமும் கூட்டணி பேசவில்லை. திமுகவிடம் தான் பேசி வருகிறோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் தெளிவாக கூறிவிட்டார்.
நான் தலைவராக இருந்து கொண்டு எல்லாவற்றையும் ஊடகங்களிடமே பேசினால் அது தலைமை பண்பா? எல்லாவற்றையும் ஊடகங்களிடம் பேசிவிட்டால் பின்னர் எதற்கு கூட்டணி கட்சிகள்? எங்களுக்கு எது தேவையோ, அதனை கூட்டணி கட்சி தலைவரிடம் நாகரீகமாக கேட்டு பெறுவோம். அகில இந்திய தலைமை சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் பேசி வருகிறோம்.
எங்களுக்கு தொகுதி வேண்டும் என்றால் திமுகவிடம் தான் கேட்க வேண்டும். ஊடகத்திடம் பேசினால், ஊடகங்களா கூடுதல் தொகுதிகளை பெற்றுத்தரப் போகின்றன? அதிகாரத்தை பெற்றுத் தர போகின்றன? காங்கிரஸ் தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்படுவார்கள்” என்று கூறினார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு சிதைப்பதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதையும், நடைபெற இருக்கும் போராட்ட விவரங்களையும் செல்வப் பெருந்தகை விவரித்தார்.
அப்போது அவர், “நம் சகோதரிகள் மோட்டார் சைக்கிளில் 3,580 கிலோ மீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு செய்துள்ளனர். அவர்களை வரவேற்று பாராட்டி உள்ளோம். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம், ஜனவரி 30-ஆம் தேதி அமைதியான போராட்டம் நடைபெறும். ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும்.
பிப்ரவரி 7 முதல் 15 வரை மாநில அளவிலான பெருந்திரள் மக்கள் போராட்டத்தை நடத்த உள்ளோம். கோரிக்கை பேரணிகளை நடத்த உள்ளோம். பாஜக அரசை கண்டித்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆதரவாக மகாத்மா காந்தி பெயர் நீடிக்க வேண்டும்.
சோனியா காந்தி வழிகாட்டுதல்பேரில் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த புரட்சிகரமான திட்டத்தை எந்த சேதாரமும் சிதைவும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி மாநாடு நடத்தப்பட உள்ளது.
அகில இந்திய பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார் இடமும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இபிஎஸ் ஊழல் புகார்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து ஊழல் குற்றாட்டு புகார் வழங்கியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “ஊழல் குறித்து ஆளுநரை சந்தித்து யார் மனு கொடுப்பது என்றே தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தலாமா?
முதலமைச்சர் மீது எனக்கு ஒரே வருத்தம் தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது தான். அனைவரிடத்திலும் தாயுள்ளத்தோடு நடந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக-வினர் மீதும் தாயுள்ளத்தோடு நடந்து கொள்கிறார்” என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பது வேறு. அதே நேரத்தில், உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எவ்வித அசம்பாதவிதமும் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் சென்று உரிய பரிகாரம் பெற வேண்டும்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

