முதல்வர் ஸ்டாலின் கார் டயர் வெடித்தது ஏன்? செல்லூர் ராஜூ கண்டுபிடிப்பு
ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பது தவறு என்றும், அந்த விவகரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது என்றும் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

Published : January 8, 2026 at 5:13 PM IST
மதுரை: திருப்பரங்குன்றம் முருகனை முதலமைச்சர் விமர்சனம் செய்ததால் அவரது கார் டயர் பஞ்சர் ஆகி இருக்கலாம் என செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், பாஜக தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என பிதற்றுகிறார். போதைக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இப்படி அவர்கள் கூட்டணியில் உள்ள வைகோவே கூறியுள்ளார்” என்றார்
அதிமுக கூட்டணி குறித்து பேசுகையில், ”அதிமுக கூட்டணிக்கு வரக் கூடிய கட்சிகள் குறித்து, பொதுச் செயலாளர் எடப்பாடி தான் முடிவு செய்கிறார். கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறோம். மக்கள் மனக் குமுறுலோடு, இந்த ஆட்சியை அகற்ற மக்கள் ஆர்வமோடு இருக்கிறார்கள். 2026 அதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற கட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
நாங்கள் பாஜகவுக்கும், அமித்ஷாவுக்கும் அடிமை என நீங்கள் தான் ஏதேதோ சொல்கிறீர்கள். 125 நாட்களாக வேலை உறுதி திட்டத்தை உயர்த்திக் கொடுத்த அமித்ஷாவிற்கு நன்றி சொல்ல தான் பொதுச்செயலாளர் எடப்பாடி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார்” எனக் கூறினார்.
ஜனநாயகன் விவகாரம் குறித்து செல்லூர் ராஜூ பேசுகையில், “விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம். அதை விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பது தவறு. ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது” என்றார்.
திமுக கூட்டணியை விமர்சித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “கூட்டணிப் பலத்தில் தான் திமுக இருக்கிறது. எங்கள் அம்மா போன்று யாருடைய கூட்டணியையும் எதிர்பாராமல் திமுகவும், முதலமைச்சரும் இருக்க முடியுமா? அரசு விளம்பரங்களில் முதலமைச்சர் தன்னைப் பற்றி தானாகவே பெருமை பேசுகிறார். மக்கள் இந்த ஆட்சியைப் பற்றி, பெருமையாகப் பேசுகிறார்களா? தைரியமாக இருந்தால், தேர்தலில் தனித்து திமுக நிற்க முடியுமா?“ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும் 3000 ரூபாய் கொடுத்தாலும் சரி, கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் சரி திமுக வெற்றிப் பெற முடியாது எனக் கூறினார்.
| இதையும் படிங்க: ”வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோ” என்று பேசுவதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி |
முதலமைச்சர் ஸ்டாலின் கார் டயர் பஞ்சரானது குறித்து பேசுகையில், “முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் திருப்பரங்குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகி இருக்கலாம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்” என்றார்.

