திமுகவுடன் இருக்க கஷ்டமாக இருந்தால் காங்கிரஸ் தனித்து போட்டியிடலாமே? சீமான் பேட்டி
திமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்பார்களே தவிர கூட்டணியை விட்டு காங்கிரஸ் வராது என்று சீமான் கூறினார்.

Published : January 6, 2026 at 8:00 PM IST
சென்னை: திமுகவுடன் இருக்க கஷ்டமாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்க வேண்டியது தானே? என சீமான் கேள்வி எழுப்பினார்.
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரம், காங்கிரஸ் - திமுக கூட்டணி பிரச்சினை, விஜய்க்கு சிபிஐ சம்மன் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை குறித்து பேசினார்.
திருப்பரங்குன்றம் தீப பிரச்சினை குறித்து பேசிய சீமான், '' திருவண்ணாமலை உள்பட எல்லா இடத்திலும் தீபத்தை மலை உச்சியில் ஏற்றுவது தான் வழக்கம். திருப்பரங்குன்றம் விஷயத்தில் தமிழக அரசு கையாண்ட முறையை நீதிமன்றம் கண்டித்து இருப்பதை கவனிக்க வேண்டும். இரண்டு சமய வழிப்பாட்டை யாருக்கும் பிரச்சனை இல்லாமல் செய்ய, நல்லிணக்க குழு அமைத்து சுமூகமாக பேசி தீபம் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், அறநிலையத் துறை அப்படி செய்யவில்லை.
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக விளக்கு ஏற்றப்பட்ட முறை நிறுத்தப்பட்டு உள்ளது. அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் வாக்குகளுக்காக விளக்கேற்றுவதில் பிரச்சினை செய்கின்றனர். உண்மையில் இறை வழிபாட்டிற்காக இந்த பிரச்சினை ஏற்படவில்லை. ஒற்றுமையாக வாழும் தமிழ் சமூகத்திற்கு இடையே தேர்தல் ஆதாயத்திற்காக இப்படி செய்ய கூடாது'' என்று சீமான் விமர்சித்தார்.
விஜய் மற்றும் தவெக கூட்டணி குறித்து பேசிய சீமான், ''கரூர் சம்பவத்தில் விஜய்யிடம் சிபிஐ விசாரிப்பதை தவிர்க்க முடியாது. தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றால் விசாரணையில் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். விஜய் கூட்டணியை விரும்புகிறார். இதனால் அவர் கட்சியில் வருபவர்களை இணைத்துக் கொள்கிறார். கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார். நான் கூட்டணியை விரும்பவில்லை. அதனால், ஆட்சியில் பங்கு என்று விஜய்யின் அறிவிப்பு குறித்து நான் எதுவும் பேச முடியாது'' என்றார்.
ஆட்சியில் பங்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பேச்சுக்கள் குறித்து பேசிய சீமான், '' காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரை திமுக தானே ஜெயிக்க வைத்தது. திமுகவுடன் இருப்பது கஷ்டமாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தனியாக தேர்தலை சந்திக்கலாம். திமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்பார்களே தவிர கூட்டணியை விட்டு காங்கிரஸ் வராது.'' என்றார்.
பொங்கல் பரிசு தொகை குறித்த கேள்விக்கு, '' தேர்தல் வருவதால் பொங்கல் பரிசு தொகையை அறிவித்து உள்ளார்கள். ஏற்கனவே கடன் இருக்கும் போது இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி செலவிடுவது தேர்தல் அரசியல். மாணவர்களுக்கு மடிக்கணினியை கடந்த ஆண்டு கொடுத்து இருக்கலாம். தமிழக அரசு விழாக்களில், நடிகர்களை அழைத்து பேச விடுவது, நடிகர்கள் நாட்டை ஆள்வதை தவிர்க்க முடியாமல் போய் விடும். இது அரசு கிடையாது. கமிஷன் மண்டி. இதை ஒழிக்க முடியாது. மொத்தமாக துடைத்து எறிய வேண்டும்'' என்றார்.

